சிம்புவுக்கு எதிராக சீவப்படும் கொம்பு..! யங் சூப்பர் ஸ்டார் சோதனைகள்

0 612

டிகர் சிம்புவின் கால்சீட்டுக்காக கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்ததாக தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு என்று இயக்குனர் சீமான் அறிவித்து 8 மாதம் கடந்த நிலையில் அவரை வைத்து படம் தயாரிக்கலாம் என்று தைரியமாக முடிவெடுத்த 5 தயாரிப்பாளர்கள் கோடிகளை கொட்டிக் கொடுத்து விட்டு தவித்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.

டிரிபிள் ஏ படத்தின் முதலாவது பாகத்தில் 20 கோடி ரூபாயை இழந்த மைக்கேல் ராயப்பன், 2 வது பாகத்திலாவது ஏதாவது தேரும் என்று காத்திருந்து நொந்து போயிருக்கிறார்.

பலரும் எச்சரித்த நிலையில் நாம எப்பவுமே உஷார் என்ற ரீதியில் சிம்புவிடம் 2 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை கொடுத்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுக்கு சிம்பு காட்டிய படம் இன்னும் முடியவில்லை என்றால், சிம்பு நம்ம பையன் என்று அண்ணன் என்ற உரிமையோடு 2 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் கொடுத்து வெங்கட்பிரபு கூட்டணியில் மாஸ் ஆக மாநாடு நடத்த திட்டமிட்ட சுரேஷ் காமாட்சிக்கு படப்பிடிப்பு தொடங்கவே இல்லை..!

இதற்கு பள்ளி மாணவர் போல சனி ஞாயிறு லீவு கேட்டு அடம் பிடித்து படத்தின் தொடங்கவிழாவுக்கே மூடுவிழா நடத்திய சிம்புவின் வம்புதான் காரணம் என்று சொல்லப்படுகின்றது.

ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், யாருக்கோ போட்டியாக சிம்புவை மீண்டும் நிலை நிறுத்த அவசரப்பட்டு ஒரு கோடியை அள்ளிக்கொடுக்க , பதிலுக்கு சிம்பு கால்சீட்டை கிள்ளி கூட கொடுக்கவில்லை என்பது தனிக்கதை என்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் வரிசை கட்டி மாத கணக்கில் காத்திருக்க விபரம் தெரியாமல் கொரில்லா பட தயாரிப்பாளர் அதிகபட்சமாக சிம்புவுக்கு, 3 கோடி ரூபாயை முன்பணமாக கொடுத்துவிட்டு பாதிக்கப்பட்டோர் சங்கத்தில் புதிதாக இணைந்துள்ளார்.

இவர்கள் அனைவரும் சிம்புவுக்கு எதிராக தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த ஆலோசனை குழு உறுப்பினர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார், சிம்பு தரப்பில் பேசி பார்த்ததாக கூறப்படுகின்றது. தற்போது பாங்காக்கில் ஓய்வில் இருக்கும் சிம்பு தனது வீட்டில் இருந்து பதில் வரும் என சுட்டிக்காட்ட, வீடு தேடிச்சென்ற தயாரிப்பாளர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

எப்போதும் சிம்புவுக்காக குரல் கொடுக்கும் தந்தை டி.ராஜேந்தர் கூட இந்த முறை பாராமுகமாய் இருந்து விட்டதாக தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதையடுத்து வட்டிக்கு பணம் வாங்கி சிம்புவிடம் கொடுத்துவிட்டு படம் தொடங்காமல் வட்டிகட்டி நொந்து போன தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து சென்னை காவல் ஆணையரிடம் சிம்பு மீது பணம் மோசடி புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..!

இது தொடர்பாக சிம்பு தரப்பில் விளக்கம் பெற அவரது தந்தை டி ராஜேந்தரை தொடர்பு கொண்டோம் சிம்புவை போலவே அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை..!

ஒரு காலத்தில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த சிம்புவுக்கு இது கடும் சோதனை காலமாகவே பார்க்கப்படுகின்றது..!

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments