அமேசான் காட்டு தீயை அணைக்கும் பணியில் சூப்பர் டேங்கர் விமானம்

தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலுள்ள அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க அமெரிக்காவில் இருந்து டேங்கர் விமானம் களம் இறக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் 20 சதவீத ஆக்சிஜனை வெளியிடுவதால், உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளின் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 8 நாடுகளில் பரந்து விரிந்துள்ள அமேசான் காடுகளின் பெரும்பாலான பகுதிகள் பிரேசில் மற்றும் பொலிவியாவில் தான் உள்ளன.
கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பதற்கு குளோபல் சூப்பர் டேங்கர் நிறுவனத்திடம் இருந்து போயிங் 747 ரகத்தை சேர்ந்த விமானத்தை வாடகைக்கு எடுத்திருப்பதாக பொலிவியா அதிபர் எவோ மாரல்ஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
அதன்படி அந்த நிறுவன தலைவர் டேன் ரீசி தலைமையிலான 14 பேர் அடங்கிய குழுவினர் பொலிவியா வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சூப்பர் டேங்கர் விமானம் ஒரே தடவையில் சுமார் 71 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கீழே கொட்டும் வல்லமை கொண்டது.
சூப்பர் டேங்கருடன் இணைந்து தங்களது ஹெலிகாப்டர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவித்துள்ள பொலிவியா அதிபர், இந்த பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Comments