பயங்கரவாதத்தை உலக நாடுகள் நிராகரிக்க வேண்டும் - இந்தியாவும், பக்ரைனும் கூட்டாக வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தும் நாடுகளை உலக நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று இந்தியாவும், பக்ரைனும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு சனிக்கிழமை இரவு பக்ரைன் சென்ற பிரதமர் நரேந்திரமோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் ஒருவர் பக்ரைன் செல்வது இதுவே முதன் முறையாகும். பஹ்ரைனில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நிர்ணயித்து தமது அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பக்ரைன் மன்னர் ஹமத் பின் இச அல் கலீபாவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருநாடுகள் இடையிலான உறவை வலிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு பக்ரைன் மன்னர் மறுமலர்ச்சிக்கான விருது வழங்கி கவுரவித்தார். இது இந்தியாவுக்கான கவுரவம் என்றும், 130 கோடி இந்திய மக்களின் சார்பில் விருதை ஏற்றுக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து,பக்ரைன் மன்னர் ஹமத் பின் இச அல் கலீபா மற்றும் இளவரசரும் பிரதமருமான கலிபா பின் சல்மான் ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது சைபர் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி, உயர்கல்வி, வர்த்தகம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அளிக்கவும் உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் இரு நாடுளும் ஒப்புதல் தெரிவித்தன. பயங்கரவாதத்தை மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தும் நாடுகளை, உலக நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று இந்தியாவும், பக்ரைனும் கூட்டாக வலியுறுத்தின.
கலாச்சார பரிமாற்றம், விண்வெளி தொழில்நுட்பம், சூரிய மின்சக்தி ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும், பக்ரைனுக்கும்இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவின் ரூபே கார்டு திட்டத்தை தொடங்கவும் பக்ரைன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
பக்ரைன் மன்னரை இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். பக்ரைன் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருப்பதாகவும், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் பக்ரைன் மன்னர் அப்போது கூறினார்.
பஹ்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு தலைநகர் மனாமா-வில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீநாத்ஜி கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் கோவில் வளாகத்தில் தன்னை வரவேற்ற பஹ்ரைன் வாழ் இந்தியர்களுடன் பிரதமர் உரையாடினார்.
பக்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெற்றும் ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்.
Comments