கொள்ளையனை சாமர்த்தியமாக பிடித்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர்

0 785

பெரம்பலூரில் கட்டுக்கட்டாக 13 லட்ச ரூபாய் பணத்துடன் குடிபோதையில் ஆட்டோவில் சுற்றித் திரிந்த சந்தேகத்திற்கிடமான நபரை, ஆட்டோ ஓட்டுநர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

பெரம்பலூர் புதிய மதன கோபாலபுரம் பகுதியை சேர்ந்த முருகையா ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று இரவு 10.30 மணியளவில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் சவாரிக்காக ஆட்டோவுடன் காத்திருந்தபோது, டிராவல்ஸ் பேக்குடன், போதை தலைக்கேறிய நிலையில் வந்த நபர், அருகிலுள்ள லாட்ஜுக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

அவரை பி.பி ரெசிடென்சி என்ற லாட்ஜுக்கு ஆட்டோ டிரைவர் முருகையா அழைத்துச் சென்றுள்ளார். குடிபோதையில் இருந்த காரணத்தால் அந்த நபருக்கு ரூம் இல்லை என லாட்ஜ் நிர்வாகம் மறுத்துள்ளது. பின்னர் துறைமங்கலம் கே.கே.நகர் பகுதியிலுள்ள எல்.கே.எஸ் ரெசிடென்சி என்ற லாட்ஜ்க்கு அழைத்து சென்று இறக்கி விட்டுள்ளார்.

அந்த நபர் லாட்ஜில் ரூம் கேட்ட போது முகவரி ஆவணங்கள் வேண்டுமென்று நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர். அந்த நபர் பையைத் திறந்து ஆவணங்களை எடுக்க முயன்றுள்ளார். அப்போது டிராவல்ஸ் பேக்கினுள் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு ஆட்டோ டிரைவர் முருகையாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனே இங்கு ரூம் எடுக்க வேண்டாம் எனக்கு தெரிந்த இடம் உள்ளது அங்கு போகலாம் என அந்த நபரிடம் லாவகமாக பேசி அவரை ஆட்டோவில் அழைத்து சென்று பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

போலீசார் அந்த நபரிடம் இருந்த டிராவல்ஸ் பேக்கை பறிமுதல் செய்து அதில் இருந்த பணத்தை கணக்கிட்டு பார்த்த போது, பதினெட்டு 500 ரூபாய் கட்டுகளும், முப்பத்தி ஒன்பது 100 ரூபாய் கட்டுகளும், சில்லரையாக 9 ஆயிரத்து 200 ரூபாயும் என மொத்தம், 12 லட்சத்து 97 ஆயிரத்து 200 ரூபாய் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் அந்த நபர் திருச்சி பாலக்கரை அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஸ்டீபன் என்பதும், கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவன் என்பதும் தெரிய வந்தது.

மேலும் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதியிலுள்ள சிட்டி யூனியன் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் லோகி கேஷ் ஏஜென்சி நிறுவன பணியாளர்களின் கவனத்தை திசை திருப்பி, திருச்சி சிட்டி யூனியன் வங்கி கிளையில் வைத்து 16 லட்ச ரூபாய் பணத்தை திருடியதும் கண்டறியப்பட்டது. அந்த பணத்தில் மூன்று லட்ச ரூபாயை கடந்த மூன்று நாட்களாக ஊர், ஊராக சுற்றி ஸ்டீபன் ஜாலியாக செலவு செய்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து ஸ்டீபனை பெரம்பலூர் போலீசார் திருச்சி கோட்டை காவல்நிலைய போலீசிடம், ஒப்படைத்தனர். இதுதொடர்பாக திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே சந்தேகத்திற்கு இடமாக பணத்துடன் சுற்றிய போதை ஆசாமியை சாதுர்யமாக பேசி அழைத்து சென்று, காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் முருகையாவிற்கு போலீசார் உள்ளிட்ட பொது மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments