கோவையில் 2வது நாளாக தொடர்கிறது தேடுதல் வேட்டை..!

0 675

தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பான எச்சரிக்கையை அடுத்து, பாதுகாப்பு பணிக்காக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அதிவிரைவுப் படை மற்றும் ராஜஸ்தானில் இருந்து சிஆர்பிஎப் படையினர் கோவை வந்துள்ளனர். 

லஷ்கர்-இ-தைபா அமைப்பை சேர்ந்த 6 பேர் தமிழகத்திற்குள் ஊடுருவியதாகவும், அவர்கள் கோவையில் பதுங்கியிருக்கலாம் என உளவுத்துறை தகவல் அளித்ததையடுத்து அவர்கள் தாக்குதல் நடத்த கூடும் என்ற அடிப்படையில் கோவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கோவையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மக்கள் கூடும் இடங்களில் சீருடையிலும், மப்டியிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் பிரிவு, வெடி குண்டு நிபுணர்கள், காவல் விரைவு தகவல் பிரிவு மற்றும் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் கோவையில் முகாமிட்டுள்ளனர்.

2வது நாளாக கோவையில் சோதனை தொடரும் நிலையில், ரயில் நிலையம், பேருந்துநிலையம், கோவில்கள், ஆலயங்கள், பெரிய வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு சற்று தளர்த்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசாரோ அல்லது கமாண்டோ படையினரோ இல்லாமல், மாநகர போலீசார் மட்டுமே பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தில் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் இன்று காலை தீவிர சோதனையில் ஈடுபட்டனர். போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சந்தேகிக்கும் வகையில் யாரேனும் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்றிரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனரா என காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு மத்திய பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த
மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர், அருவங்காடு இராணுவ வெடிமருந்து தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இராணுவ வீரர்கள், அதிகாரிகள் உட்பட அனைவருமே அடையாள அட்டையை பார்த்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பர்லியார், குஞ்சப்பனை, கக்க நல்லா உள்ளிட்ட 27 முக்கிய சோதனை சாவடிகளில் ஆயுதம் ஏந்திய போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளுர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் விடிய விடிய தீவிர வாகன சோதனைக்கு உட்படுத்திய போலீசார் சோதனை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்:

இந்நிலையில் சுற்றுலா தளமான உதகையின் நுழைவு வாயிலாக விளங்கும் மேட்டுப்பாளையத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தபட்டு உள்ளது. மேட்டுப்பாளையம் உதகை சாலையில் ஆற்று பாலம் அருகே சோதனைச்சவாடி அமைக்கப்பட்டு  அனைத்து வாகனங்களும் 24 மணி நேரமும் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கபடுகின்றன. மேலும் பாதுகாப்பிற்காக பிளாக் கமெண்டோ என்ற சிறப்பு அதிவிரைவு படையினர் இன்று மேட்டுப்பாளையத்தில் குவிக்கபட்டுள்ளனர்.

நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பவானி ஆற்று பாலம் சோதனைச்சாவடியில் துவங்கிய துப்பாக்கி ஏந்திய கமெண்டோ படை வீரர்கள் உதகை மேட்டுப்பாளையம் சாலையின் வழியே பேருந்து நிலையம் வரை அணிவகுத்து சென்றனர். மேலும் பேருந்து நிலையத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் சிறப்பு காவல் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். காவல் சோதனைச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஈரோடு, சத்தியமங்கலம் அடுத்து தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் 2ஆவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அங்கு சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் ஈரோடு நக்சல் ஒழிப்பு பிரிவு போலீசார் 10க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வரும் பயணிகள் விபரம் சேகரிப்படுவதோடு, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருந்தால், ஹெல்மெட்டை கழற்றி அடையாளம் காணப்பட்டு, அவர்களது பொருட்கள் சோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் சிலரிடம் சந்தேகத்தின்படி அவர்களது ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், எங்கிருந்து வாகனம் புறப்பட்டு எங்கு செல்கிறது போன்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி அங்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் குறித்த எச்சரிக்கையையடுத்து அங்கு போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பக்தர்களின் உடமைகள் முழு சோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், வஜ்ரா வாகனங்கள் ஆலயத்தின் முகப்பில் நிறுத்தப்பட்டுள்ளதோடு வேளாங்கண்ணி முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களின் விவரங்கள் அனைத்தும் பெறப்பட்ட பிறகே அனுமதிகப்படுகின்றன.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் சனிக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ள நிலையில்,  100க்கும் மேற்பட்ட போலீசார் ஆலயத்தின் உள் மற்றும் வெளி பகுதியிலும், நளதீர்த்தம் பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் முழுமையான சோதனைக்கு பிறகே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், முக்கிய சாலைகள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில்  மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மாவட்டத்தின் அனைத்து எல்லை சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும், கடலோர காவல் நிலைய போலீசார் ரோந்து படகு மூலம் கடல் பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் வீரவல்லபன் தெரிவித்தார். 

தூத்துக்குடி

தீவிரவாத ஊடுருவல் எச்சரிக்கையை அடுத்து கடலோர மாவட்டமான தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக கடலோர பகுதிகளில் இரண்டாவது நாளாக தமிழக கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பாண்டியன் தீவு, முயல் தீவு உள்ளிட்ட பகுதிகளை ரோந்து படகில் இருந்தவாறே கடலோர காவல்படையினர் கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதால் 2ஆது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. உதகையில் சனிக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் அனைவரையும் சோதனை செய்த பிறகே பூங்காவிற்குள் அனுமதிக்கின்றனர். படகு இல்லத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குன்னூர் ராணுவ முகாம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களை ராணுவ வீரர்களும் காவல் துறையினரும் இணைந்து சோதனை செய்து வருகின்றனர். ராணுவ முகாம் வழியாக சுற்றுலா தலங்கள் மற்றும் கோத்தகிரி, கோவை செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேறு வழியாக திருப்பி விடப்படுகிறது. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கும், அங்கிருந்து உதகை மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயிலில் பயணிகள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தின் அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் மற்றும் உடமைகள் தீவிர சோதனை செய்யப்படுகின்றன.

இதனிடையே லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரையும், அவருடன் இருந்த பெண்ணையும் கேரள மாநிலம் கொச்சியில் போலீசார் கைது செய்தனர். கொச்சியில் அப்துல் காதர் ரகீம் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். திருச்சூர் மாவட்டம் கொடுங்கள்ளூரைச் சேர்ந்த அந்த நபருக்கு லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவருடன் இருந்த பெண்ணையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

காந்திபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் சிவகுமாருடன், துப்பாக்கி ஏந்திய 40 கமண்டோ படை வீரர்கள், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் பேருந்து நிலையங்கள், மற்றும் கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பேருந்துகளில் ஏறி பயணிகளின் உடமைகளை வெடிகுண்டு  கண்டறியும் கருவி மூலம் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்திற்கிடமான பார்சல்களை சோதனையிட்டு, பயணிகளிடம் விசாரணையும் மேற்கொண்டனர். கடைகளில் சந்தேகப்படும் வகையில் அமர்ந்திருந்த நபர்களிடம் அடையாள அட்டைகளை வாங்கி பரிசோதித்தனர். இதேபோல் நகரின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனையும் விசாரணையும் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments