பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு

0 582

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மையத்தில் பயிலும் ஆய்வு மாணவி, தன்னுடைய ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் கர்ண மகாராஜன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து, பல்கலைக்கழகப் பதிவாளரிடம் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில் விசாரணை நடத்துவதற்காக பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியை வசந்தி தலைமையில், இளைஞர் நலத் துறை பேராசிரியை ஜெயபாரதி, பல்கலைக்கழக நிர்வாகப்பிரிவு அலுவலர்கள் செல்வி, அன்புச் செல்வன் உள்ளிட்டோர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர், குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் கர்ண மகாராஜன், புகார் அளித்த மாணவி மற்றும் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மைய பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மின்னணு ஊடக மையத்தில் பயிலும் மாணவ- மாணவியர், ஆய்வு மாணவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி பல்கலைக்கழக பதிவாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கையில் பேராசிரியர் கர்ண மகாராஜன் மீதான புகாரில் உண்மை உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற  பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டத்தில் பேராசிரியர் கர்ண மகாராஜன் மீது நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கடந்த 6 மாதங்களாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் காமராசர் பல்கலைக்கழகப் பதிவாளர் பதவிக்கும், பேராசிரியர் கர்ண மகாராஜன் அண்மையில்  விண்ணப்பித்திருந்தார். இது பல்கலைக்கழக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் காமராசர் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆட்சிக் குழுக் கூட்டம் திடீரென நேற்று கூட்டப்பட்டது.இதில் துணை வேந்தர் மு.கிருஷ்ணன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் ஆராய்ச்சி மாணவி அளித்த பாலியல் புகார் உறுதி செய்யப்பட்டதால் பேராசிரியர் கர்ண மகாராஜனை பணியில் இருந்து கட்டாய ஓய்வில் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

காமராசர் பல்கலைக்கழக வரலாற்றில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் மீது எடுக்கப்பட்டுள்ள முதல் நடவடிக்கை இது என்று பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments