தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு...

0 742

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்க வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

விநாயகர் சதுர்த்தி, வேளாங்கண்ணி திருவிழாக்களை ஒட்டி, தமிழகத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறக் கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன், இலங்கையை சேர்ந்த 5 பேர் என லஸ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியிருக்கலாம் எனவும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவையில் பதுங்கியுள்ளதாக கருதப்படும் இந்த பயங்கரவாதிகள் மக்கள் கூடும் இடங்களை குறிவைத்து நாச வேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அடுத்து, டிஜிபி திரிபாதியின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சென்னையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாகனங்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் இரவு-பகலாக வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து, ரயில், விமான நிலையங்கள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலையங்களில், ரயில்வே பாதுகாப்பு படையினர், போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். பயணிகளின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

வேளாங்கண்ணி பேராலயத்தில், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையின் 170 காவலர்கள் மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 108 காவலர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள விடுதிகளில் தங்கியிருப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

ராமேஸ்வரம் அருகே கடற்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருப்பதுடன், ஹோவர்கிராப்ட் (Hovercraft) கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. பாம்பன் பாலம், தூக்குப்பாலம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவையில் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி, முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் என நகர் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இரவுபகலாக வாகன தணிக்கையும் நடைபெற்று வருகிறது.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது. இருப்புப்பாதை போலீசாரும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கருவிகள் மூலம் ரயில் பெட்டி இருக்கைகளில் சோதனை செய்யப்பட்டது.

மேட்டூர் அணையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார், சோதனை மேற்கொண்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments