ஆசை நாயகியால் தலை சிதைத்து ரவுடி கொலை..! கூலிப்படை கும்பல் சரண்

0 641

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளது. பெண்ணுக்காக நடந்த போட்டியில் ஒருவர் கை இழக்க, ரவுடி உயிரிழந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை மடிப்பாக்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர்லால். சிதம்பரம் பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே மர்மகும்பலால் தலை சிதைத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை, ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் தேடி வந்த நிலையில், பல்லடத்தைச் சேர்ந்த ரவுடி ஒத்தகை ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பல், ஒரத்த நாடு நீதிமன்றத்தில் சரண் அடைந்தது.

கொலை செய்யப்பட்ட சங்கர்லால் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்ததால், பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஆசை நாயகி என்ற ஒரு பெண்ணுக்காக ஏற்பட்ட மோதலில், சங்கர்லால் கொல்லப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

சிதம்பரம் பகுதியில் கூலிப்படையாக செயல்பட்டு வந்த சங்கர்லால், ராஜா இருவரும் கூட்டாளிகள். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஆசை நாயகி என்கிற அருணாவை காதலித்துள்ளனர். அந்த பெண் இருவரிடமும் நெருங்கிப் பழகியுள்ளார். இதில் ஆசைநாயகியை யார் ஆஸ்தான நாயகியாக்கிக் கொள்வது என்று இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ராஜாவின் கையை சங்கர்லால் வெட்டியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், திருப்பூருக்கு தப்பிச்சென்ற ராஜா, பல்லடத்தில் தங்கி இருந்து தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ஆசைநாயகியுடன் வாழ்ந்து வந்த ரவுடி சங்கர்லாலை பழிக்குப் பழிவாங்க ராஜா திட்டமிட்டதாகவும், ரவுடி சங்கர்லாலை ஒருவாரமாக நோட்டமிட்ட நிலையில், கடந்த திங்கட்கிழமை சங்கர்லாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் ஆசை நாயகி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது. இந்த தகவல் அறிந்து ஆவேசப்பட்ட ராஜா, மறுநாள் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே வைத்து, சங்கர்லாலை ,கூலிப்படையினருடன் சேர்ந்து தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் சரண் அடைந்த கூலிப்படைக் கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். பெண் ஆசையால் ஏற்பட்ட போட்டியில் இந்த கொடூர கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளதால், இதில் சம்பந்தப்பட்ட பெண்ணையும் பிடித்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

பெண்ணாசையும், பேராசையும் இறுதியில் என்ன மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments