ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வினியோகம் நிறுத்தம்

0 1222

ஏர் இந்தியா நிறுவனம் எண்ணெய் நிறுவனங்களுக்கு 4,500 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வினியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.

ராஞ்சி, மொஹாலி, பாட்னா, விசாகப்பட்டினம், பூனே, கொச்சி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் 4500 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை 7 மாதங்களாக செலுத்தவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடனை அடைக்க 90 நாட்கள் வரம்பு என்ற நிலையில் ஏர் இந்தியா கடந்த 200 நாட்களுக்கும் மேலாக கடனை செலுத்தவில்லை என்று தெரிவித்துள்ள எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் கடல் போன்ற கடன் தொகையில் சிறு துளியாக 60 கோடி ரூபாயை மட்டும் செலுத்தவே ஏர் இந்தியா முன்வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் கடனை தீர்க்கக் கோரி ஒருவாரத்துக்கு முன் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு கூட்டாக எழுதிய கடிதத்துக்கு பலன் இல்லை என்றும் கடன் எவ்வாறு தீர்க்கப்படும் என்பதற்கான வழிமுறைகளையும் ஏர் இந்தியா விளக்காததால் வினியோகத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏர் இந்தியா நிறுவனம் அரசிடம் இருந்து நிதியுதவியைப் பெறுவதாகவும் அதுபோன்ற உதவிகள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்பட்டதால் தற்போதைக்கு விமான சேவையில் பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் பிரச்சினைக்கு தீர்வு காண எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர். ஏர் இந்தியா நிறுவனத்தின் இக்கட்டான சூழல் காரணமாக பங்கு முதலீடுகளின் ஆதரவு இல்லாததால் பெருமளவிலான கடன் தொகையை கையாள இயலவில்லை என்று தெரிவித்துள்ள அவர்கள் எனினும் இந்த நிதியாண்டில் தங்களது நிதிச் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும் லாபகரமாக இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் 58 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments