ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

0 1128

கைது நடவடிக்கைக்கு எதிராக, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதன் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிதம்பரம் சிபிஐ காவலில் 5 நாட்களுக்கு அனுப்பப்பட்ட உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிட மறுத்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். கைது நடவடிக்கைக்கு முன்னர், முன்ஜாமீன் கேட்டு அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தனர்.

ஆனால் கடந்த புதன்கிழமை சிதம்பரம் கைது செய்யப்பட்டு விட்டதால் முன்ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது. இந்நிலையில், கைது நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை, நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா அமர்வு திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.

இருப்பினும், சிபிஐ வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள பணமோசடி வழக்கில், ப.சிதம்பரத்தை கைது செய்ய நீதிபதிகள் திங்கட்கிழமை வரை தடை விதித்துள்ளனர்.

முன்னதாக, அரசு தரப்பு வழக்கறிஞரும் சொலிசிட்டர் ஜெனரலுமான துஷார் மேத்தா மற்றும் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி இடையே காரசார வாதம் நடைபெற்றது.

சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கக் கூடாது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு வழக்குகளின் விசாரணையும், ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் முடிவடையும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments