காவல் நிலையங்களில் வழுக்கி விழும் கிரிமினல்கள்…! வேலூரிலும் கழிவறை சரியில்லை..!

0 3907

வேலூர் அருகே மோட்டார் வாகன உதிரிபாகங்கள் அடங்கிய கண்டெய்னருடன் லாரியை கடத்திச்சென்ற  கொள்ளையர்களை காவல்துறையினர் சினிமா பாணியில் ஜிபிஎஸ் உதவியுடன் விரட்டிப் பிடித்தனர். கண்டெய்னர் லாரியில் இருந்து குதித்து தப்ப நினைத்து கைகால்கள் முறிந்ததால் மாவுகட்டுப் போடப்பட்ட சம்பவத்தின் பரிதாப பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான லாரி புதன்கிழமை இரவு சென்னை துறைமுகத்திலிருந்து 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகன உதிரிபாகங்களை ஏற்றி கொண்டு, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. துரை என்பவர் அந்த லாரியை ஓட்டிச் சென்றார்.

வேலூர் அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் டிரைவர் துரை கண்டெய்னர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஹோட்டலில் உணவருந்த சென்றார்.

இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் லாரியை கடத்தி சென்றுள்ளனர். சாப்பிட்டு வெளியே வந்து பார்த்த போது லாரி இல்லாததை கண்டு டிரைவர் துரை அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக லாரி உரிமையாளர் வெங்கடேஷுக்கு தகவல் தெரிவித்த பின்னர், லாரியில் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் லாரி எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்காணித்த வெங்கடேஷ், ரத்தினகிரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

தனிப்படை காவல்துறையினர் ஜிபிஎஸ் சிக்னல் மூலம் லாரியை பிடிக்க விரட்டிச்சென்றனர், லாரியை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது பள்ளிகொண்டா டோல்கேட் நோக்கி லாரி சென்று கொண்டிருப்பதை கண்டறிந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லாரியை கடத்திச்சென்றவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

கடத்தல் கும்பலை சேர்ந்த அசோக்குமார், லோகேஷ், ராம்குமார், அன்பழகன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதியான சேண்பாக்கம்,முத்துமண்டபம், விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தல் கும்பல் குறித்து பகீர் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. வேலூர் தொரப்பாடி அரசு வேளாண் துறையில் பணிபுரிந்து வரும் யாசீம் என்பவர்தான் இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவன் என்பதும், அவன் தலைமையில் ஏராளமான வாகனங்களை கடத்தி, வேலூர் முத்துமண்டபம் என்ற பகுதியில் வாகனங்களை பிரித்து உதிரிபாகங்களாக கள்ளசந்தையில் விற்றுபணம் சம்பாதித்து வந்ததும் தெரிய வந்தது. யாசிம், இளைஞர்களை கையில் வைத்துக் கொண்டு போலி சிம் கார்டு மூலம் அவர்களை தொடர்புகொண்டு கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இரவு நேரங்களில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லும் வாகன ஓட்டுனர்களை குறிவைத்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளனர். கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான யாசீமை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கண்டெய்னர் லாரியோடு, ஒரு கார் , இரு இரண்டு சக்கர வாகனங்கள், 3 ஆட்டோக்கள் என 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முன்னதாக லாரியை சுற்றிவளைத்து காவல்துறையினர் மடக்கியதும், லாரியை நிறுத்திவிட்டு அதில் இருந்து சினிமா பாணியில் குதித்து தப்ப முயன்ற 4 கொள்ளையர்களுக்கும் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்து களவாடிய கும்பலின் கால் மற்றும் கைகளுக்கு மாவுக்கட்டு போடப்பட்டது..!

கிரிமினல்கள், காவல் நிலையங்களில உள்ள கழிவறைகளிலும், போலீசிடம் இருந்து தப்பி ஓடும் போதும் தவறி விழுந்து கைகால்களை முறித்துக் கொள்வதாக காவல்துறையினர் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி எளிதாக சுதந்திர பறவையாக சுற்றித்திரிந்த ரவுடிகளும், கொள்ளையர்களும் மாவுக்கட்டு வைத்தியத்தால் தற்போது மன நிம்மதியை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments