கமலஹாசனை துணைக்கு அழைக்கும் நடிகை மதுமிதா ..! சமரசம் செய்ய வேண்டுகோள்

0 6894

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா மிரட்டல் விடுப்பதாக பிக்பாஸ்  நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சார்பில் புகார் அளித்துள்ள நிலையில்  கமல்ஹாசன் சமரசம் செய்ய வேண்டும் என நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மார்க்கெட் இழந்த நடிகர் நடிகைகளையும் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர்களையும் பிடித்து குறிப்பிட்ட தொகை தருவதாக ஒப்பந்தம் செய்து நூறு நாட்கள் சகலவசதிகளும் கொண்ட ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து பிக்பாஸ் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருகின்றது.

பிக்பாஸ் வீட்டுக்குள் அடைப்பட்டு கிடக்கும் பிரபலங்கள் தங்களுக்குள் தேவையில்லாத பிரச்சனைக்காக வம்பிழுத்து சண்டையிட்டு பொழுதை கழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி அவ்வப்போது சர்ச்சைக்களில் சிக்கி வருகின்றது.

அந்தவகையில் தன்னை தமிழ் பொண்ணு என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பிக்பாஸில் வலம் வந்த நகைச்சுவை நடிகை மதுமிதா 42-வது நாளில் திடீரென வெளியேற்றப்பட்டார். கையில் கட்டுடன் வெளியேற்றப்பட்ட மதுமிதா தனக்கு தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உண்மையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாகவும், அதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்களே காரணம் எனவும், அதனால் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் எனவும் புகார்கள் எழுந்த நிலையில், மதுமிதா தற்கொலை மிரட்டல் விடுப்பதாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சம்பள விவகாரத்தில் தனக்கு சேர வேண்டிய பாக்கி தொகையை இரு தினங்களில் வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மதுமிதா வாட்ஸ் அப் கால் மூலம் மிரட்டியதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் நடிகை மதுமிதா செய்தியாளர்களை சந்தித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிகளுக்கு உட்பட்டு தற்போது வரை தான் எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது எனவும் தன் மீது பொய்யான புகாரை கொடுத்ததற்கான காரணம் தெரியவில்லை எனவும் மதுமிதா தெரிவித்தார்.

தனக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கூறிய அவர், இந்த விவகாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் தான் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்

பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கின்ற நல்லது கெட்டதெற்கெல்லாம் மையமாக இருந்து பஞ்சாயத்து செய்யும் கமல் ஹாசன், மதுமிதா பிரச்சனையையும் தீர்த்து வைப்பார் என்று காத்திருக்கின்றனர் மதுமிதா ஆதரவாளர்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments