ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்திடம் தொடர்ந்து விசாரணை

0 510

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிற்பகல் 2 மணியளவில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோர உள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாக சிபிஐயும் அமலாக்கத்துறையும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில், அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. தாம் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அங்கு முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை அன்று மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. இதற்கிடையில், தெற்கு டெல்லியின் ஜோர் பாஃக்கில் உள்ள சிதம்பரத்தின் இல்லத்திற்கு 4 முறை சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அமலாக்கத்துறையினரும் வீட்டைக் கண்காணித்தனர். ப.சிதம்பரம் அங்கு இல்லாததை அடுத்து 2 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு  சிபிஐ நோட்டீஸ் ஒட்டியது. இதைத் தொடர்ந்து, 25 மணி நேரத்திற்குப் பிறகு நேற்றிரவு சிதம்பரம் கைது செய்யப்பட்டார். மாலையில் அவர் காங்கிரஸ் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

வீடு பூட்டப்பட்டு இருந்ததால் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்ற அதிகாரிகள் சிதம்பரத்தைக் கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகம் கொண்டு சென்றனர். நிதி அமைச்சர் பதவி வகித்த போது அவர் முன்னிலையில் திறக்கப்பட்ட, சிபிஐ விருந்தினர் இல்ல தளத்தில் சிதம்பரம் காவலில் வைக்கப்பட்டார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ டிஐஜி, எஸ்.பி., டி.எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விடிய விடிய சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். நோட்டீஸ் அளிக்கப்பட்ட போதிலும் விசாரணைக்கு ஆஜராகதது ஏன்? முன் ஜாமீன் மறுக்கப்பட்ட பிறகு எங்கு சென்றீர்கள்? ஆகிய கேள்விகளை சிபிஐ கேட்டதாகக் கூறப்படுகிறது.

பிற்பகலில் ரவுஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹார் ((Ajay kumar kuhar)) முன்னிலையில் சிதம்பரம் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கேட்க முடிவு செய்துள்ளது. சிபிஐ விசாரணை முடிவடைந்த பிறகு, அமலாக்கத்துறையால் சிதம்பரம் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments