சென்னைக்கு இன்று 380 வது பிறந்தநாள்..!

0 400

380-ஆவது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

அணிவகுத்து நிற்கும் கார்கள்.... ஓங்கி உயர்ந்த கட்டடங்கள்... பரபரப்புடன் இயங்கும் வணிக நிறுவனங்கள்... இவைதான் நாம் இன்று பார்க்கும் சென்னை... ஆனால், அமைதியின் வடிவாகத் திகழ்ந்தது இதே சென்னை ஒருகாலத்தில்!

வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம் இருந்து சிறு நிலத்தை வாங்கியது கிழக்கு இந்தியக் கம்பெனி. அதுவே 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் நாள் தனி நகரமாக உருவானது.

வெங்கடப்பா நாயக்கரின் தந்தையான சென்னப்ப நாயக்கரின் பெயரால் அழைக்கப்பட்ட அப்பகுதி சென்னை நகரமாகியது. இதனை நினைவுகூரும் வகையில் இதே நாளில் கொண்டாடப்படுகிறது சென்னை தினம்.

அசாதாரணமான சம்பவங்கள், சரித்திர நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ள சென்னைதான் தமிழ்நாட்டின் தலைநகரம்...! பரந்து விரிந்த வங்காள விரிகுடாக் கடல் சென்னையின் முக்கியமான பெருமை. ஆசியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையாக கருதப்படும் மெரீனாவின் மணற்பரப்பு காண்போரை பிரமிக்க வைக்கிறது.

வாழவழியின்றி வருவோருக்கு தொழில், வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது சென்னை நகரம். நொடித்து போகும் தொழிலதிபர்களும் அதில் இருந்து மீண்டு வர நம்பிக்கை அளிக்கிறது இந்த மாநகரம்.

பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள், பறக்கும் ரயில்கள் இவையெல்லாம் நகரின் அனைத்துப் பகுதிகளையும் ஒன்றிணைக்கும் போக்குவரத்து சாதனங்கள். இவை தவிர சொந்த வாகனங்கள், தனியார் வாகனங்கள் என பல்லாயிரக்கணக்கில் இரவுபகலாக நகர் முழுவதும் வலம்வருவது அன்றாடம் நாம் காணும் காட்சிகள்...

கையேந்தி பவன் முதல் ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் எத்தனையோ இருந்தாலும், சென்னை மக்கள் விரும்புவது என்னவோ வீட்டிற்கு வந்து விநியோகிக்கும் ஸ்விக்கி, ஸொமேட்டோ, ஊபர் இவைகளைத்தான்.

ருசிதரும் தின்பண்ட விற்பனைக் கடைகள், தேநீர்க் கடைகள், குளிர்பானக் கடைகள், பழக்கடைகள் சென்னை வாசிகளுக்கு பசியாற்றுகின்றன.

பழமையின் சுவடுகள் மாறாமல் காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்து கொண்டு தற்போதும் கம்பீரமாய் நிற்கிறது.. சென்னை மாநகரம்...

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்கள் சங்கமிக்கும் சென்னைக்கு வங்கக் கடலே எல்லை !

மொழிகள் பல பேசினாலும், கலாச்சாரங்கள் பல நம் கண்ணில் பட்டாலும், விதவிதமான உணவுகளை ருசித்தாலும், பல தரப்பு மக்களுக்கும் தாய் வீடாக விளங்கும் வானவில்தான் இந்த சென்னை நகரம்..!

தென்னிந்தியாவிற்கு எல்லா வகையிலும் வழிகாட்டும் சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள சென்னை நகரம், இன்று 380 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.

தூய்மையையும், அமைதியையும் பேணிக்காத்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி அடுத்து வரும் சந்ததியிடம் அப்படியே ஒப்படைக்க வேண்டியது சென்னைவாசிகளின் தலையாய கடமை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments