பெருநிறுவன மயமாகும்., தளவாட தொழிற்சாலைகள்.!

0 448

போர்த்தளவாட தொழிற்சாலை வாரியத்தை பெருநிறுவன மயமாக்குவதில் உள்ள நன்மைகள் குறித்து விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு...

ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம் என்பது பாதுகாப்பிற்கான உற்பத்தித் துறையின் கீழ் அதனோடு இணைக்கப்பட்ட ஓர் நிறுவனம் ஆகும். இதில் 41 போர்த்தளவாட தொழிற்சாலைகள், 9 பயிற்சி நிலையங்கள், 3 பிராந்திய விற்பனை மையங்கள் ஆகியவை செயல்படுகின்றன. இதன் தலைமையகம் கொல்கத்தாவில் உள்ளது.

ராணுவ தளவாட தொழிற்சாலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன. டாங்குகள் உள்ளிட்ட கவச வாகனங்கள், பீரங்கிகள், சிறிய மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவை இவற்றில் தயாரிக்கப்படும் பொருட்களாகும். படைவீரர்களின் வசதிக்குத் தேவையான சீருடைகள், கூடாரங்கள், காலணிகள் போன்றவையும் இவற்றில் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், ராணுவ தளவாட தொழிற்சாலைகள் பெருநிறுவனமயமாக்குவதில், உள்ள நன்மைகளையும், ஏன் அந்த நடைமுறை முன்னெடுக்கப்படுகிறது என்பது பற்றியும், பாதுகாப்புத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறது.

ராணுவத் தளவாட தொழிற்சாலைகள் ராணுவப் படைகளின் பிரத்யேக மையங்களாக நிறுவப்பட்டாலும், நீண்ட காலமாக செயல்திறனில் அவை பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. ராணுவத் தளவாட தொழிற்சாலைகள் உற்பத்தி செய்வதில், பட்டியலிடப்பட்ட 275 முக்கியமற்ற பொருட்கள் பொதுச்சந்தையில் மிக எளிதாகக் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமான விலை, புதிய கண்டுபிடிப்புகள் இல்லாத நிலை, மிகக் குறைந்த உற்பத்தித் திறன் ஆகியவை முக்கிய காரணிகளாவதாக கூறப்பட்டுள்ளது. எனவே, ராணுவத் தளவாடங்களுக்கான தொழிற்சாலை வாரியம் என்பதை ராணுவத் தளவாட தொழிற்சாலை கழகம் என்பதாக மாற்றி பெருநிறுவன மயமாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் விஜய் கேல்கர் தலைமையிலான குழு, போட்டித் திறமை கொண்ட நிர்வாகத் தலைமையின் கீழ் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் அனைத்தையும் தனியொரு பெருநிறுவனத்தின் கீழ் நிறுவனமயமாக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

அரசுத் துறையின் ஓர் அங்கம் என்பதில் இருந்து பொதுத்துறை நிறுவனம் என்பதாக மாறுவதில் உள்ள நன்மைகளை, பாதுகாப்புத்துறை பட்டியலிட்டுள்ளது. செயல்திறனை மேம்படுத்தி, செலவை குறைக்க வழிவகுக்கும் என்றும், ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருட்களின் இறக்குமதி குறைவதோடு, தளவாட ஏற்றுமதி சந்தையில் மேலும் அதிகமாக செயல்பட முடியும்.

உரிய நேரத்தில் தரமான பொருட்களை சப்ளை செய்ய முடிவதோடு, அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும். ராணுவ தளவாட தொழிற்சாலைகள் பெருநிறுவன மயமாக்கப்பட்டால், அவற்றை நவீனப்படுத்த அரசிடமிருந்து நிதியுதவியை எதிர்பார்க்க வேண்டிய அவசியமிருக்காது. புதிய பொருட்களை உருவாக்க உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நிறுவனங்களுடன் செயல்திறன் மிக்க கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என பாதுகாப்புத்துறை கூறியிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments