ப.சிதம்பரம் முன்ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது

0 852

 ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின்  ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிற்கு நேற்றிரவே சென்றது. ஆனால் வீட்டில் அவர் இல்லாத தால் அதிகாரிகள் வெறுங்கையோடு திரும்பினர். இதையடுத்து நள்ளிரவு 2 மணிக்கு அவரது வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அடுத்த 2 மணி நேரத்தில் விசாரணைக்கு சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்ற நோட்டீசை அவரது வீட்டில் ஒட்டிச் சென்றனர்.

இந்நிலையில் சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்க அவரை தேடப்படுபவராக அறிவித்து அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் இன்று காலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்கும் போது, தங்களின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பதை வலியுறுத்தி கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இதனிடையே முன் ஜாமீன் கோரும் மனுவை ப.சிதம்பரத்தின் சார்பில் அவரது வழக்கறிஞர்களான கபில் சிபல், விவேக் தன்கா, இந்திரா ஜெய்சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டுமென அவர்கள் நீதிபதிகள் என்.வி.ரமணா, சதானந்த கவுடர், அஜய் ரஷ்டோகி அடங்கிய அமர்வில் முறையிட்டனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி என்.வி. ரமணா, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றால் அது குறித்து தலைமை நீதிபதிதான் தீர்மானிக்க வேண்டும் என்றார். மேலும் சிதம்பரத்தின் மனு தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து உத்தரவு வந்த பின்னரே விசாரிக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து உணவு இடைவேளைக்கு பின்னர் மதியம் 2 மணி அளவில், நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வில் கபில்சிபல் மீண்டும் முறையிட்டார். அப்போது வழக்கு விசாரணைக்கு பட்டியலிடாத நிலையில் அதனை விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்தனர்.

மனுவில் இருந்த பிழைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டதாக கபில்சிபல் கூறியதை அடுத்து உச்சநீதிமன்ற பதிவாளர் சூர்ய பிரதாப் சிங்கை வரவழைத்து நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, மனுவில் இருந்த பிழைகள் இப்போது தான் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன் உள்ளதாகவும் பதிவாளர் கூறினார்.

அயோத்தி வழக்கை விசாரிப்பதால் தலைமை நீதிபதி அமர்வு, மனு மீது இன்று முடிவு எடுக்க வாய்ப்பில்லை என்றும், எனவே ரமணா தலைமையிலான அமர்வே மனுவை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்றும், அதற்கு வாய்ப்பில்லாத பட்சத்தில் இடைக்கால நிவாரணமாக சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் கபில்சிபல் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழக்கமாக மனுக்கள் அனைத்தையும் மாலையில் தான் தலைமை நீதிபதி பட்டியலிடுவார் என்றும், ஆனால் சிதம்பரத்தின் மனுவை காலையிலையே பட்டியலிட வகை செய்யுமாறு தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைத்த தாக கூறினர்.  மேலும் வழக்குகளை பட்டியலிடுவது தங்களின் பணி இல்லை என்றும், அது பதிவாளரின் வேலை என்றும் கூறிய நீதிபதிகள், வழக்கு பட்டியலிடப்பட்டால் விசாரிக்க தயார் என்றும் கூறினர்.

இதன் இடையே ப.சிதம்பரத்தின் மனு மீது வெள்ளிக்கிழமை அன்று விசாரணை நடைபெறும் வகையில் உச்சநீதிமன்றம் அதனை பட்டியலிட்டு உள்ளது. இதனால் அடுத்த இரு நாட்களில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை இல்லாத தால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments