துடிப்பான, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே தமிழக அரசின் லட்சியம் - முதல்வர்

0 373

துடிப்பான, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதும், இளைஞர்களை தனி சிறந்த சக்தியாக மாற்றுவதுமே தமிழக அரசின் லட்சியம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க மாணவிகள் பாடுபட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஈரோட்டை அடுத்துள்ள திண்டலில் நடைபெற்ற வேளாளர் மகளிர் கல்லூரியின் 50- ம் ஆண்டு விழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொன் விழா கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், உயர்கல்வி மூலம் மிகவும் துடிப்பான அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதும் தொழில் நுட்பம் மற்றும் கண்டு பிடிப்புகள் மூலம் இளைஞர்களை தனி சிறந்த சக்தியாக உருவாக்குவதும் தமிழக அரசின் நோக்கம் என்றார்.

உயர்கல்வி மூலம் திறன் வாய்ந்த தொழிலாளர்களை போதுமான எண்ணிக்கையில் உருவாக்கி, தமிழ்நாட்டை உலகளாவிய மையமாக மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய அளவில் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை 25.8 சதவிகிதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் 48.6 சதவிகிதம் பேர் உயர்கல்வி கற்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

படிக்கும் காலத்தில் மாணவிகளின் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருக்க வேண்டும் என்ற அவர், பெற்றோரின் கனவுகளை பிள்ளைகள் நனவாக்க வேண்டும் என்றார். படித்த கல்வியை கொண்டு மாணவிகள் நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஈரோடு, பெருந்துறை காங்கேயம் சாலையில் ஐந்தரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 300 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்ற அவர், ஈரோடு மாவட்டத்தில் அரசு செய்துள்ள பல்வேறு திட்டப்பணிகளை பட்டியலிட்டார்.

விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், குடிமராமத்து, அத்திகடவு - அவினாசி திட்டங்களால் தமிழக அரசு புதிய வரலாறு படைத்துள்ளது என்றார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பள்ளிக் கல்வித்துறைக்கு 34,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விழாவில் தமிழக அமைச்சர்கள் கே.சி.கருப்பண்ணன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்பட பலர் பங்கேற்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments