கிரண்பேடிக்கு எதிரான உத்தரவு.. தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

0 732

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக, தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றின் ஆவணங்களைக் கேட்பதற்கும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில், யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணை நிலை ஆளுநர் செயல்பட முடியாது எனத் திட்டவட்டமாக கூறினார். எனவே, யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு தடை விதித்து, உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்யாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உச்சநீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி, அரசியல் சாசன பிரிவுகளையும், விதிகளையும் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அதேசமயம், எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசு ஆவணங்களை கேட்க துணை நிலை ஆளுனருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததாகவும் , டெல்லி உயர்நீதிமன்றத்தின் அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விட்டதாகவும் வாதிட்டார்.

இதையடுத்து, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்க எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன், கிரண்பேடி ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments