அச்சுறுத்தும் வெள்ள பாதிப்பு...அசத்தல் திட்டம் தயார்..!

0 485

வெள்ள பாதிப்புகளில் இருந்து வரும் காலத்தில் தற்காத்துக்கொள்ளும் வகையில் 'நிகழ்நேர வெள்ள முன்கணிப்பு ' திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2015ம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. வெள்ள பாதிப்புகளில் இருந்து நகரங்களை தற்காத்துக்கொள்ள எடுக்கப்படவேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அவசியத்தை அனைவருக்கும் அந்த பேரிடர் உணர்த்திச்சென்றது .

இதன் தொடர்ச்சியாகவே, வெள்ளத்தால் ஏற்படும் பெரும் பாதிப்புகளை தவிர்க்க, அமெரிக்காவில் இருப்பதை போன்ற நிகழ்நேர வெள்ள முன்கணிப்பு திட்டத்தை செயல்படுத்த நீண்ட ஆய்வுக்கு பின்னர் அரசு முன்வந்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை ஒருங்கிணைத்து 4837 சதுர கிமீ உள்ளடங்கிய வெள்ள முன்கணிப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. (Real-time flood forecasting ). தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம் (TNUIFSL) மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணைந்து செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளன.

கோவளம் , அடையாறு, கூவம் , கொசஸ்தலையாறு, ஆரணியாறு மற்றும் அவற்றை சுற்றியுள்ள சிறு நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நகரப்பகுதிகளை கண்காணிப்பதற்கான வரைப்படம் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

தாழ்வான பகுதி , சமநிலை பகுதி , மேடான பகுதி என தனித்தனியே பிரித்து கனமழை பெய்தால் முதலில் எந்த பகுதியில் வெள்ளம் பாதிக்கும் என்பதை கண்டறியும் வகையில் டிஜிட்டலாக வரைபடத்தை மத்திய நிறுவனமான சர்வே ஆப் இந்தியா தயாரித்து வருகிறது.

பருவமழை , புயல் மற்றும் பேரிடர் காலத்தின்போது பெய்யும் மழை அளவானது வானிலை ஆய்வு மையத்தின் உதவியோடு தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்த பணிகளுக்காக மூன்று காண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளன. மேலும் நீர்நிலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அளவினை கணக்கிடும் வகையிலான கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

இதன் மூலம் , கனமழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் எந்த பகுதிகளை வெள்ளம் பாதிக்கும், நீர்நிலைகள் கொள்ளளவை எட்டும் நேரம், அவ்வாறு ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறினால் எந்தப்பகுதிக்குள் முதலில் தண்ணீர் வெளியேறும் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கணிக்க முடியும் .

இவ்வாறு, நிகழ்நேரத்திலேயே பெய்யும் மழையைக் கொண்டே எந்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்கக்கூடும் என்பதை கணிக்க முடியும் என்பதால், அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை முன்கூட்டியே எச்சரிக்கவும் வெளியேற்றவும் முடியும் எனவும், இதனால் கடுமையான பாதிப்புகளையும் உயிர் சேதகங்களையும் தவிர்க்க முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.

உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்த உள்ள இத்திட்ட பணிகளை முடித்து செயல்பாட்டுக்கு வர மூன்று ஆண்டுகள் வரை ஆகும் எனவும், அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்களும் இத்திட்ட மேற்பார்வை பணிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்டுள்ள பெருவெள்ள பாதிப்புகளை பார்க்கும் போது இது போன்ற ஒரு வெள்ள முன்கணிப்பு திட்டம் என்பது மிக அவசியமானது எனக்கூறும் சமூக ஆர்வலர்கள் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments