போலீசில் பிடித்துக் கொடுத்தவரை வெட்டிக் கொன்ற கஞ்சா வியாபாரி...

0 2811

காஞ்சிபுரம் அருகே பொதுமக்களால் போலீசில் ஒப்படைக்கப்பட்ட கஞ்சா வியாபாரி, 3 மாதம் கழித்து சிறையிலிருந்து வெளியே வந்து, தன்னை பிடித்துக் கொடுத்தவர்களை பழிதீர்க்கும் வகையில் பொதுமக்கள் சிலரை அரிவாளால் வெட்டியதில் ஒருவர் பலியானார். மேலும் பலத்த வெட்டுக்காயங்களுடன் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி பகுதியில் கஞ்சா வியாபாரம் கொடிகட்டி பறந்த நிலையில், அதனை தடுக்க நினைத்த பொதுமக்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர்த்தலைவர் மூலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் கஞ்சா வியாபாரத்தில் முக்கியப் புள்ளியாக கருதப்படும் அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவனையும், பொதுமக்கள் சேர்ந்து பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கஞ்சா வியாபாரி புருஷோத்தமன், திங்கட்கிழமை ஜாமீனில் வெளியே வந்துள்ளான். தன்னை பிடித்துக் கொடுத்த ஊர்மக்கள் மீது கடும் கோபத்துடன் ஊருக்கு வந்தவன், ஜாமீன் பெற செலவான தொகையை ஊர்மக்கள் சேர்ந்து திரட்டி தர வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளான். இதையடுத்து ஊர்மக்கள் சேர்ந்து கஞ்சா வியாபாரி புருஷோத்தமனை விரட்டியடித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரவுடி புருஷோத்தமன், அரக்கோணத்தை சேர்ந்த தனது கூட்டாளிகள் சிலரை சேர்த்துக் கொண்டு மீண்டும் காலையில் கோவிந்தவாடி அகரம் பகுதிக்கு வந்துள்ளான். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை புருஷோத்தமன் உள்ளிட்ட ரவுடிக் கும்பல் தாங்கள் வைத்திருந்த பட்டாக் கத்திகளைக் கொண்டு வெட்ட முயன்றுள்ளனர். இதனால் பீதியடைந்த பொதுமக்கள் தெறித்து ஓடிய நிலையில், அவர்களை விரட்டிச் சென்ற ரவுடி கும்பல் 7 பேரை சரமாரியாக வெட்டியுள்ளது.

மேலும் அங்கிருந்த வீடுகளையும் சூறையாடினர். அதில் ஊர்த்தலைவர் தனஞ்செழியன் என்பவருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பலத்த காயமடைந்த 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய புருஷோத்தமன் உள்ளிட்ட ரவுடி கும்பல் தப்பிச் சென்றுள்ள நிலையில், பாலுச்செட்டி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன், இதுகுறித்து விசாரிக்க 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இதனிடையே கோவிந்தவாடி அகரம் பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்காக, அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments