ரயிலில் சிக்கிய இருசக்கர வாகனம் - குழந்தைகளுடன் தப்பிய பெண்

0 5037

சென்னை கொருக்குப்பேட்டையில் ரயில் வந்த போது ஆபத்தான முறையில் குழந்தைகளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்ணின் இரு சக்கர வாகனம் பழுதாகி நின்றதால் பதற்றம் ஏற்பட்டது. ரயில் நெருங்கி வந்ததையடுத்து அந்தப் பெண் வேகமாக செயல்பட்டு குழந்தைகளுடன் உயிர் தப்பினார். 

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் சுமதி. இவர் தனது இரு குழந்தைகளையும் பள்ளியில் விடுவதற்காக தனது ஸ்கூட்டி வாகனத்தில் சென்றார். கொருக்குப்பேட்டை ரயில்வே கிராசிங்கில் ரயில் செல்வதற்காக கேட் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த நிலையில் சுமதி தனது குழந்தைகளை விரைவாக பள்ளியில் விடவேண்டும் என்ற அவசரத்தில் ரயில்வே கேட்டை கடந்து தண்டவாளத்தை கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது தண்டவாளத்தின் நடுவே இருசக்கர வாகனம் பழுதாகி நின்றது. அந்த நேரத்தில் சென்னை - நெல்லூர் விரைவு ரயில் வேகமாக வந்துகொண்டிருந்ததால் அங்கிருந்த மக்கள் அலறினர். வாகனத்தை இயக்க முடியாத நிலையில் சமயோசிதமாகவும் விரைந்தும் செயல்பட்ட சுமதி தனது குழந்தைகளுடன் தண்டவாளத்தை கடந்து தப்பினார்.

ஆனால் தண்டவாளத்தில் நின்ற வாகனம் விரைவு ரயிலில் சிக்கி சிதைந்தது. வெகு தூரம் ரயிலால் இழுத்துச் செல்லபட்ட இருசக்கர வாகனத்தின் பாகங்களை மீட்ட பிறகு ரயில் சேவை தொடங்கியது.

இந்த சம்பவத்துக்கு காரணமான சூழ்நிலை குறித்து இருதரப்பு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. ரயில் வருவதற்கான சிக்னல் கொடுக்கப்பட்டு வாகனங்கள் செல்ல தடுப்புகள் போட்டாலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் கொருக்குப்பேட்டை ரயில்வே கிராஸிங்கை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அலுவலக நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாகவும், அதன் காரணமாகவே ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடக்க வேண்டிய சூழல் நிலவுவதாகவும் கூறுகின்றனர். வாகனங்கள் செல்ல அந்த இடத்தில் சுரங்க வழி பாலம் அமைக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments