நீர்நிலைகளைக் காக்க முதலமைச்சர் வேண்டுகோள்

0 744

கண்ணை இமை காப்பது போல் விவசாயிகள் நீர்நிலைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ஏரியை தூர்வாரிய விவசாயிகளுக்கு தனது சொந்த நிதியில் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு தீர்க்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதில் அவர், தலைவாசல், ஆத்தூர் மற்றும் வாழப்பாடியில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் மனு பெற்று குறைகளை கேட்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் பேசிய அவர், முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம், சாதாரண நிகழ்ச்சி இல்லை என்றார்.தகுதியான மனுக்கள் மீது உறுதியாக, தீர்வு காணப்படும் என்றும் மனுக்களை வாங்கி கொண்டு அப்படியே விட்டுவிடுவார்களோ என்று பொதுமக்கள் கருத வேண்டாம் என்றும் அவர் கூறினார். உடலுக்கு உயிர் முக்கியமானது போல், விவசாயிகளுக்கு நீர் மிகவும் முக்கியம் ஆகும் என்றார். கண்ணை இமை காப்பது போல் விவசாயிகள் நீர்நிலைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மழை நீர் வீணாவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய அவர்,நடப்பு ஆண்டில் 500 கோடி ரூபாய் செலவில் 1829 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார். விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் அடங்கிய குழு மூலம் இந்த பணிகள் நடைபெறுவதாக அவர் கூறினார். குறை தீர்ப்பு திட்டத்தில் பலர் மனைப்பட்டா கேட்டும், பட்டா மாறுதல் கேட்டும் விண்ணப்பம் அளித்துள்ளதாகவும், தகுதி வாய்ந்த மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும், தகுதி வாய்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக கூறிய முதலமைச்சர், பட்டா இருந்தும் வீடுகள் அற்றவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும் என்றும், வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதே அரசின் லட்சியம் என்றும் அவர் கூறினார். தமிழகத்தை குடிசைகளே இல்லாத பகுதியாக மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வேளாண் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் நெசவு தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி நடப்பதாக கூறிய முதலமைச்சர், இந்த பணி முடிந்ததும் ஒரு குடும்பத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார். ஆத்தூர் தலைமையிடமாக கொண்டு புதிய சுகாதார மாவட்டம் அமைக்கப்படும் என்றும், இந்த ஆட்சியில் பல திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு வரும் நிலையில் எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பயனாளிகளுக்கு பலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள அபிநவம் ஏரியில் நடந்து வரும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறை கேட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments