தமிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்.. கொசுக்களை பிடித்து ஆய்வு..!

0 783

மிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க, கியூலக்ஸ் இன கொசுக்களைப் பிடித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மனித ரத்தத்தை உறிஞ்சும் பெண் கொசுக்களின் விபரீத தாக்குதல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. 

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பொழியத் தொடங்கி இருக்கும் நிலையில், நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் பொது சுகதாரத்துறை முன்னெடுத்துள்ளது.

அந்தவகையில் தற்போது ஜப்பானிய மூளைக்காய்ச்சலை தமிழகத்தில் வரவிடாமல் தடுக்க, அதிவேக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 1871ல் ஜப்பானில் பெரும்பாலான சிறுவர்களைத் தாக்கிய இந்தவகை காய்ச்சலுக்கு 1935 ஆம் ஆண்டுக்கு பின்னர்தான் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

மழை பொழிந்து புல்வெளியில் படர்ந்த நன்னீரில் உற்பத்தியாகும் கியூலக்ஸ் கொசுக்கள் கடிப்பதால் உருவாகும் கொடிய நோய் தான் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்...!

வெளிநாட்டுப் பறவைகளையும், பன்றிகள் மற்றும் மாடுகளையும் கடிக்கின்ற கியூலக்ஸ் கொசுவுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் என்றும், அவை ஒரு மனிதரைக் கடித்தால் அவருக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம், மதுரை, விருதுநகர், கரூர் ஆகிய 14 மாவட்டங்களில் இருந்து 22,500 கியூலெக்ஸ் கொசுக்களைப் பிடித்து பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு நடத்தினர். இதில் 5 கொசுக்களில், ஜப்பானிய மூளைக்காய்ச்சலை பரப்பும் ரத்தமாதிரிகள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூரில் 3, வேலூரில் ஒன்று, கள்ளக்குறிச்சியில் ஒன்று இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தவகை மட்டுமல்ல, அனைத்து வகை கொசுக்களிலும் மனித உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சுவது பெண்கொசுக்கள் மட்டுமே என்றும், மனித ரத்தத்தில் மட்டுமே கொசுக்களின் கரு முட்டையை வளர்க்க உதவும் புரதச்சத்து உள்ளதாக தெரிவிக்கின்றார் முதுநிலை பூச்சியியல் வல்லுனர் அலமேலு.

கியூலக்ஸ் கொசுக்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணிமுதல் 8 மணி வரை மட்டுமே மனிதர்களைக் கடிக்கும் தன்மை உடையவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவான 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இந்த கொசுக்கள் கடித்தால் ஜப்பானிய மூளைகாய்ச்சல் எளிதில் தாக்கும் என்று எச்சரிக்கின்றனர்.

ஒருவரை ஜப்பானிய மூளைகாய்ச்சல் தாக்கினால், உடலில் ஆரம்ப கட்டத்திலேயே 110ல் இருந்து 120 டிகிரி வரை உச்சப்பட்ச காய்ச்சல் இருக்கும், அவர்களின் கண்கள் சிவப்பாக மாறும், கழுத்து நிலையாக நில்லாமல் நடுங்கிக் கொண்டே இருக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக நினைவாற்றல் மங்கி, சுய நினைவை இழக்கவைக்கும், தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக இருந்தால் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒரு வாரம் வரை மனிதனை பாடாய்ப் படுத்தும் இந்தவகை காய்ச்சல் வந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்தபரிசோதனை மேற்கொண்டு, தேவையான சிகிச்சை மேற்கொள்வது அவசியம். இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தவும், குணமாக்கவும் தேவையான மருந்து மற்றும் மாத்திரைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தயாராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஜப்பானிய மூளை காய்ச்சலைப் பரப்பும் கியூலக்ஸ் கொசுக்களை எளிமையாக கட்டுப்படுத்த, அரசின் பொது சுகாதாரத்துறையின் கீழ் உள்ள பூச்சிகள் ஆய்வுக் கூடத்தில் தினமும் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எந்த ஒரு நோயும், வந்தபின் நொந்து கொள்வதை விட வரும்முன் காப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் வீட்டை சுற்றி புல்தரையிலும், பழைய பொருட்களிலும் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்வது நாம் ஒவ்வொருவரின் கடமை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments