கேண்டீன் உணவில் அஜினோமோட்டா கலப்பால் ஆத்திரம்..! ஜேப்பியார் கல்லூரியில் கல்வீச்சு

0 411

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஜேப்பியார் எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி கேண்டீனில், அஜினோ மோட்டாவை அதிகளவில் கலந்து, தரமற்ற முறையில் உணவு தயாரிப்பதைக் கண்டித்து மாணவர்கள், கல்லூரி ஜன்னல் கண்ணாடிகளை கல்வீசி உடைத்தனர்

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஜேப்பியார் எஸ்.ஆர்.ஆர் பொறியியல் கல்லூரி உள்ளது. ரெஜினா ஜேப்பியாரை தலைவராகக் கொண்டு செயல்படும் இந்த கல்லூரியில், மாணவர்களிடம் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலித்துக் கொண்டு, போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.

சில மாதங்களுக்கு முன்பு, இதே குழுமக் கல்லூரியில் சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடப்பதாக புகார் எழுந்தது. இதற்காக கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கல்லூரி கேண்டின் உணவில் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்தும் அஜினோமோட்டோவை அதிக அளவில் கலந்து தரமற்ற முறையில் துரித உணவு தயார் செய்து வழங்கப்பட்டதாக புதிய புகார் எழுந்துள்ளது.

வேதிப்பொருளான அஜினோமோட்டோ உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பது தெரிந்தே கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு வழங்கும் உணவில் அதனை கலப்பதாகக் குற்றம் சாட்டிய மாணவர்கள் கேண்டீனில் உள்ள டியூப் லைட்டுகளை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். அத்தோடு கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து, கல்லூரியின் கண்ணாடி ஜன்னல்களைக் கல்வீசி அடித்து உடைத்தனர்.

கல்லூரி வளாகத்திற்குள் பேரணியாக சென்ற மாணவர்கள் கல்லூரிப் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்ததாகவும் கூறப்படுகின்றது. கல்லூரி நிர்வாகம் மாணவர் நலனில் அக்கறை இன்றி செயல்படுவதாகவும், மாணவர்களிடம் வாங்கும் கட்டணத்துக்கு ஏற்றார் போல எந்த ஒரு வசதியும் இல்லை என்றும் மாணவர்கள் ஆதங்கப்பட்டனர்.

இது தொடர்பாக கல்லூரி முதல்வர் எழில் ஷாம் லெனியைத் (Ezil Sam Leni) தொடர்பு கொண்டு விசாரித்த போது, தங்கள் கல்லூரியில் அப்படி ஏதுவும் நடக்கவில்லை என்று முதலில் மறுத்த அவர், நம்மிடம் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் உள்ளதாக தெளிவுபடுத்தியதும், மாணவர்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது என்றும், அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்டனர் என்றும் தெரிவித்தார்.

தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் தங்கள் கல்லூரியில் சகலவசதிகளும் இருப்பதாக கூறி மாணவர்களின் பெற்றோர்களிடம் லட்சக்கணக்கில் கட்டணத்தை கறந்து விடுகின்றனர். பலத்த எதிர்பார்ப்போடு செல்லும் மாணவர்களை ஏமாற்றிவிடாமல், அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை கல்லூரி நிர்வாகங்கள் செய்து தரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments