காதலியை ஏமாற்ற வைகை அணையில் குதித்த காதலன்..! விஷம் குடித்தும் தப்பினார்

0 567

ண்டிப்பட்டி அருகே காதலி முன்பு விஷத்தை குடித்துவிட்டு, அணையில் குதித்து தற்கொலை நாடகமாடிய காதலன் நீச்சல் அடித்து எதிர்கரைக்கு சென்று, போவோர் வருவோரிடம் கெஞ்சி உயிர் பிழைத்துள்ளார். இது தெரியாமல் காதலி கொடுத்த தகவலின் பேரில், காதலனின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் இரண்டு நாட்களாக அணையில் தேடி உள்ளனர்.

திரைப்படம் ஒன்றில் 'சூனா பானா' வேடத்தில் நடித்திருக்கும் வடிவேலு, தான் விஷத்தை குடித்து விட்டதாகக் கூறி ஊராரிடம் காப்பாற்றச் சொல்லி கெஞ்சுவார். அதேபோல ஒரு உண்மைச் சம்பவம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடந்துள்ளது..!

போடி அருகே கோம்பையைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் விஜய், இவர் 17 வயது சிறுமி ஒருவரை ஒரு வருடமாகக் காதலித்து வந்துள்ளார். திருமண வயது பூர்த்தியாகாத நிலையில் கடந்த மே 2 ந்தேதி திருமணம் செய்வதற்காக சிறுமியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிறுமியை கடத்திச் சென்றதாக விஜய் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

3 மாத சிறைவாசத்திற்கு பின்னர், கடந்த 14 ந்தேதி நிபந்தனை ஜாமீனில் விஜய் வெளியில் வந்துள்ளார். போடி காவல் நிலையத்தில் காலையும், மாலையும் கையெழுத்து போட்டு வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை, தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு விஜய், தனது காதலியை வைகை அணைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் அங்கு சுற்றி பொழுதைக் கழித்துவிட்டு, மாலையில் வைகை அணை மதகுப் பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். முதலில் விஷத்தை குடிக்க மறுத்த அந்த பெண், தொடர்ந்து தற்கொலை செய்வதில் விருப்பமில்லை என்று தயங்கியபடியே நின்றுள்ளார்.

அதற்குள்ளாக விஷத்தை படக்கென்று குடித்த விஜய், அந்த பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு அணையில் குதிக்க தயாராகி உள்ளார். ஆனால் உஷாரான அந்த பெண் கையை சரியாக பிடிகொடுக்காமல் இருந்துள்ளார். ஒன்றாக குதிக்கும் எண்ணத்தில் விஜய் அணையில் இருந்து கீழே குதிக்க, அந்த பெண்ணோ கையை உருவிக்கொண்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து ஓடியவர் தனது காதலன் அணையில் குதித்து தற்கொலை செய்து விட்டதாக போலீசில் தெரிவிக்க, போலீசார் அந்த பெண்ணை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தேட தொடங்கினர்.

இரவு வெகுநேரம் ஆகியும் விஜயின் சடலம் கிடைக்காத நிலையில், திங்கள் கிழமை 2 வது நாளாக தேடுதல் பணியை மேற்கொண்டனர். மாலை வரை தேடியும் விஜயின் சடலம் சிக்கவில்லை. இந்த நிலையில், தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக விஜய் சேர்க்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்தபோது நிஜ 'சூனா பானா' காமெடி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

சாகும் போதும் தனது காதலி உடன் வருவாள் என்ற நம்பிக்கையில் இருந்த தன்னை காதலி கைவிட்டதால் ஏமாற்ற அடைந்த விஜய் உயிர்பிழைக்க விரும்பியுள்ளார். அரைகுறை மயக்கத்துடன் அணை நீரில் நீச்சல் அடித்து எதிர்கரைக்கு சென்று அங்கு மீன் பிடிக்க வந்த சிலரிடம் தான் காதலிக்காக விஷம் குடித்த தகவலை சொல்லி தன்னை காப்பாற்றும் படி கெஞ்சியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் இரக்கப்பட்டு விஜய்யை மீட்டு மோட்டார் சைக்கிளில் வைத்து தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். விஜய் குடித்த பூச்சி மருந்து வீரியம் குறைந்தது என்பதால் அவரது உயிருக்கு உடனடியாக ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காதல் என்பது கண்ணில் தொடங்கி இதயத்திற்குள் புகுந்தாலும், இந்த வயதில் இது தேவையா? என்று சற்று மூளையை உபயோகித்தால் இதுபோன்ற விபரீத சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments