நீர்நிலைகள் பாதுகாப்பு குழு அமைக்க உத்தரவு..!

0 505

13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து அரசு தலைமைச் செயலர் தலைமையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழு அமைத்து ஆலோசித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள ஏராளமான நீர்நிலைகளும் நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆக்கிரமிப்பு காரணமாக போதிய அளவு தண்ணீரை தேக்க முடியவில்லை என்றும், பல கண்மாய்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் முறையிடப்பட்டிருந்ததது. வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாகவும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

எனவே மதுரை மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள், நீர்வழித் தடங்களிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், தூர்வாரி தண்ணீரை தேக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதேபோல் தமிழகத்தில் நீர்நிலைகள் நாளுக்கு நாள் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகள், வணிகவளாகங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், இதனால் மழைநீரை சேகரிக்க முடியாமல் நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதே பிரச்சனையை முன் வைத்து பலரும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை இன்று விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரம்பிற்குட்பட்ட 13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது, பராமரிப்பது மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைக்க உத்தரவிட்டனர்.

தமிழக தலைமை செயலர் தலைமையில் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழுவில் பொதுப்பணித்துறை செயலர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட துணை ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளை
இடம்பெறச் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் வீரகதிரவனை நியமித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கறிஞர் வீரகதிரவனும் பங்கேற்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments