முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம்..!

0 664

தமிழகத்தில் மக்களை தேடிச் சென்று அதிகாரிகளே மனுக்களை பெற்று குறைகளை தீர்த்து வைக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் மக்கள் மனு கொடுத்த ஒரு மாத காலத்திற்குள் குறைகள் தீர்த்து வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் சட்டசபையில் பேசும்போது, ‘முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளதாக கூறினார். இந்த திட்டத்தின் தொடக்கவிழா சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வனவாசியில் நடைபெற்றது. முன்னதாக
பெரிய சோரகை கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

பின்னர் அவரது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு உட்பட்ட வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குறைதீர்வு திட்ட தொடக்க விழா நடந்தது. விழாவில் பங்கேற்று புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், மக்களை குறைகளை தீர்க்க வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் குறை தீர்க்கும் கூட்டமும், வெள்ளிக்கிழமைகளில் வட்டாச்சியர் தலைமையில் அம்மா திட்டமும் செயல்படுவதை சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகளை மக்களை தேடிச் சென்று மனு அளிப்பதை தவிர்க்கவும், மக்களை தேடி அதிகாரிகளே சென்று மனுக்களை பெற்று, குறைகளை தீர்க்கவே முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த திட்டத்தின் மூலம் மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார். மேலும் என்னென்ன வகையான குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.

எடப்பாடி தொகுதியில் திட்டத்தை தொடங்கினாலும், தமிழகத்தில் உள்ள ஏனைய 233 தொகுதிகளிலும் இந்த திட்டம் ஒரே நாளில் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் செப்டம்பர் மாதத்தில் அமைச்சர்கள் தலைமையில் மேலும் ஒரு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

குறைதீர்க்கும் திட்டத்திற்காக ஒரு தாலுகாவிற்கு 25,000 ரூபாய் வீதம் 76 லட்சத்து 25,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார்.மேட்டூர் அணையின் உபரி நீரை கொண்டு ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் ஆகிய நான்கு தொகுதிகளைச் சேர்ந்த 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் 565 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் மேலும் 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

அரசும், அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே மிகசிறந்த நிர்வாகத்தை தர முடியும் என்று முதலமைச்சர் இப்போது தொடங்கப்பட்டுள்ள திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்றார். முன்னதாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வனவாசி அருகில் உள்ள செட்டிமாங்குறிச்சியில் புது ஏரியை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

சேலம், மணியனூரில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தில் தற்காலிக அரசு சட்டக்கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

20-ந்தேதி அன்று சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காலை 9.30 மணிக்கும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காலை 11 மணிக்கும், வாழப்பாடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கும் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெறுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


  • sudha

    பொதுப்பணி துறை தினகூலிகள் எப்பொழுது பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

  • sudha

    பொதுப்பணி துறை தினகூலிகள் எப்பொழுது பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்