வேலூரில் கனமழை 110 ஆண்டுகளுக்குப் பின் 16 செ.மீ. மழை

0 786

வேலூர் மாவட்டத்தில் 110 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் 16 செண்டி மீட்டர் மழை பொழிந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சாரலுடன் தொடங்கிய மழை, இரவில் கனமழையாக வெளுத்து வாங்கியது. இதனால் மாநகரின் பிரதான சாலைகளில், மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

திடீர் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களிலுள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.

மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் அப்பகுதிகளில் சென்ற பல வாகனங்கள் பள்ளங்களில் சிக்கிக் கொண்டன.

வேலூரில் கடந்த 110 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 16 மழை பெய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி வேலூரில் 106 மி.மீ. பெய்ததே வேலூரில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை பொழிவாக இதுவரை இருந்து வந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை தொடங்கி கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில், 10 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளது. வாணியம்பாடி, ஆம்பூரில் பெய்த கனமழை காரணமாக, ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போலானது.

ஆம்பூரில் மோட்டுக் கொள்ளை, விண்ணமங்கலம் ஆகிய இடங்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. வடிகால்களை முறையாகப் பராமரிக்காததால் தான் ஊருக்குள் தண்ணீர் புகுந்ததாகக் கூறி, பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் காரணமாக, அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் தேங்கி நின்றன. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். டி.என்.ஏ. சாலையில் மின்மாற்றி கவிழ்ந்ததில் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனிடையே வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெய்த மழையால், ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அங்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆம்பூர் அடுத்த மேல்மிட்டாளம் கிராமத்தில் கனமழை காரணமாக, யுவராஜ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வெள்ளம் புகுந்தது. இதில் பண்ணையில் வளர்த்து வரப்பட்ட சுமார் ஆயிரம் கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன.

வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சூழலை பயன்படுத்தி பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வெள்ள நீர் நுரை பொங்கியவாறு செல்கிறது. கழிவு நீர் கலந்திருப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments