கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

0 1471

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோர கிணற்றுக்குள் விழுந்ததில் 3 குழந்தைகள் 4 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

முசிறி அடுத்த பேரூர் கிராமத்தைச் சேர்ந்த 17 பேர் டாட்டா ஏஸ் வாகனத்தில் S.N. புதூரில் நடைபெற்ற கோவில் விழாவில் பங்கேற்கச் சென்றுள்ளனர். வாகனம் திருமனூர் அருகே வந்தபோது அதன் முன்பக்க டயர்களில் ஒன்று வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் தடுப்புகள் இன்றி காணப்பட்ட பாழடைந்த 100 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் சிக்கியிருந்தவர்களை ஒவ்வொருவராக மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காமலும், 8 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களில் 4 பெண்கள், 3 குழந்தைகள், ஒரு ஆண் ஆகியோர் அடக்கம். 

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வதும் குறுகிய சாலையில் அதிவேகத்தில் செல்வதும் விதிகளுக்குப் புறம்பானது என்பதோடு ஆபத்தான செயலும் ஆகும். இதனை உணராது செயல்பட்டதன் காரணமாக இந்த சோக சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments