செங்கல், ஜல்லி இல்லை புதிய பாணியில் கட்டிடம்..!

0 3396

செங்கற்களை பயன்படுத்தாமல், முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 32 ஏக்கரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது திருப்பதி ஐஐடி. புதிய முறையிலான கட்டிட அமைப்பு பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

2015ஆம் ஆண்டு திருப்பதியில் துவங்கப்பட்ட ஐஐடி-யின் புதிய கட்டிடங்கள் கடந்தவாரம் முதல் பயன்பாட்டுக்கு வந்தன.

புதுமையான முறையில், சுற்றுச்சூழலையும், இடவசதியையும் கருத்தில் கொண்டு, பசுமை வளாகமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் இவை அமைக்கப்பட்டுள்ளன. Glass Fibre Reinforced Gypsum என்ற புதிய தொழில் நுட்பத்தின் மூலம் கண்ணாடி Fiber மற்றும் ரசாயனக் கழிவான ஜிப்சத்தைக் கொண்டு இங்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மாணவர்களின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், உணவு உண்ணும் அறை, விடுதி மற்றும் உள் விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை முழுவதும் ஜிப்சம் மற்றும் கண்ணாடி fiber-கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. 

உரத்தொழிற்சாலைகளில் இருந்து கிடைக்கும் கழிவுப் பொருளான ஜிப்சத்துடன் சில வேதிப் பொருட்களும் கண்ணாடி பைபர் போன்றவை சேர்த்து நீளமான பேனல்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த நீளமான பேனல்களை ஒன்றோடு ஒன்று இணைத்து எளிமையாக இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

GFRG தொழில்நுட்பத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடங்களுக்கு பிள்ளர்களும் தேவை இல்லை எனவே இடவசதியும் அதிகமாக கிடைக்கிறது. சாதாரணமாக செங்கற்களைப் பயன்படுத்தி கட்டப்படும் சுவர்கள் கனமாக இருக்கும் ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கட்டப்படும் சுவர்கள் 5 இன்ச் அளவிற்கு மட்டுமே இருப்பதால் அதிகமான இடவசதி கிடைக்கும் என்கிறார் திருப்பதி ஐஐடியின் இயக்குனர் சத்திய நாராயணா..

சிமெண்ட் மட்டும் செங்கற்களைக் கொண்டு கட்டப்படும் கட்டடங்களை விட ஜி எஃப் ஆர் ஜி தொழில்நுட்பத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடங்கள் மிகவும் உறுதித் தன்மை மிக்கவை என்றும் இதன் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் கூடுதலாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல பேரிடர் காலங்களில் புயல்,மழை வந்தாலும் செங்கற்களால் கட்டப்படும் வீடுகளை விட பாதுகாப்பு தன்மை அதிகம் உடையவை என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டின் தானே புயல் பாதிப்பில் எந்தவித சேதங்களுக்கும் உள்ளாகாமல் கம்பீரமாக நிலைத்து நிற்கும் சென்னை ஐஐடியின் வளாகத்தில் கட்டப்பட்டு இருக்கும் மூன்று குடியிருப்புகளே அதற்கு சாட்சி.

இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு மாதத்திற்குள்ளாக ஒரு வீட்டையே கட்டி முடிக்கலாம் என்பதோடு பொருட்செலவு, மனித உழைப்பு, பணம் என அனைத்துமே ஏறக்குறைய 50 சதவீதம் குறைவாகும்.

இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்த புதிய தொழில்நுட்ப கட்டடக்கலை வேகமாக பரவி வருகிறது.

புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ராட்சத மின்விசிறிகள் இவ்வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளன இவை இலேசாக சுற்றினாலே அதிகமாக குளிர்ச்சியான காற்றை கொடுக்கிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்த்து உள்ள இக்கல்லூரி நிர்வாகம், இவ்வளாகத்திற்கு தேவையான முழு மின்சாரத்தையும் சூரிய ஒளி ஆற்றல் மூலமாக பெறப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. உபரி மின்சாரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கல்லூரி நிர்வாகம் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

குறைவான காலத்தில் நிறைவான கட்டிடமாய் உருவாகியுள்ள இந்த கல்லூரி வளாகம் சென்னை ஐஐடி கட்டிடவியல் மாணவர்களின் பங்களிப்பால் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments