செய்வினை தகட்டை எடுக்க வீட்டுக்குள் 25 அடி குழி..! மணல் கடத்தல் புகாரில் சிக்கினர்

0 2499

சென்னை டி.பி சத்திரத்தில் மந்திரவாதியின் பேச்சை நம்பி, செய்வினைத் தகட்டை எடுக்க முயன்று, வீட்டிற்குள் 25 அடி ஆழ குழிதோண்டியதால், போலீசில் சிக்கி இருக்கிறார் பெண் ஒருவர். 20 நாட்களாக தகட்டைத் தேடியவரை விசாரிக்க கனிமவளத்துறை சென்ற பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை டி.பி.சத்திரத்தில் உள்ள கே.வி.என்.புரம் பகுதியைச் சேர்ந்த ராஜா, அவரது மனைவி மைதிலியுடன் அங்குள்ள குடிசை வீட்டில் வசித்து வந்தார். குடும்பக் கஷ்டத்தில் உழன்று வந்த மைதிலி ஜாதகம் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் செய்வினை வைக்கப்பட்டுள்ளது என்றும், அதனை எடுக்கா விட்டால் இருவரின் உயிருக்கும் ஆபத்து என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கணவர் ராஜாவின் கை கால்கள் திடீரென செயல் இழந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல், தனது கணவர் ராஜாவை, மிண்ட் தங்கச்சாலை பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி சுரேஷ் என்பவரிடம் மைதிலி அழைத்து சென்றுள்ளார். அவர்களிடம் இருந்த கொஞ்சப் பணத்தையும் நைசாகப் பேசி உருவிக்கொண்ட மந்திரவாதி, வீட்டிற்குள் செய்வினைத் தகடு புதைக்கப்பட்டுள்ளது என்றும், அதனை தோண்டி எடுத்து விட்டால் எல்லா கஷ்டங்களும் தீர்ந்துவிடும் , கணவர் ராஜாவுக்கு உடல்நிலை சீராகி விடும் என்றும் கதை அளந்து விட்டுள்ளான்.

இதனை உண்மை என்று நம்பி, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மந்திரவாதி துணையுடன் நள்ளிரவு வேளையில் வீட்டிற்குள் குழிதோண்டி தகட்டை தேடியுள்ளார் மைதிலி. கயிற்றைக் கட்டி கிணறு போல 25 அடி ஆழத்திற்கு தோண்டியபோது, மூட்டை மூட்டையாக மண் வந்ததே தவிர அங்கு தகடு ஏதும் சிக்கவில்லை.

அந்த குழியில் இருந்து எடுக்கப்படும் மண்ணை மூட்டையாகக் கட்டி வீட்டிற்கு வெளியே வைத்துள்ளார். இரவில் மைதிலியின் வீட்டில் ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மைதிலியின் வீட்டிற்கு வெளியே 70 மூட்டை மண் இருப்பதை கண்டு அதிர்ந்து போன காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இந்த செய்வினை பூச்சாண்டி கதைகள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்தன. மைதிலி, அவரது கணவர் ராஜா, மந்திரவாதி சுரேஷ் ஆகியோரை விசாரித்த காவல்துறையினர், மண்ணை மூட்டை மூட்டையாகத் தோண்டி எடுத்து கட்டிவைத்த புகார் குறித்து விசாரிக்க கனிம வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

செய்வினைக் கோளாறு என்று கிளப்பிவிட்ட மந்திரவாதி பணத்துடன் தப்பிவிட. சொந்த வீட்டிற்குள் கிணறு போல குழி தோண்டிய பெண்ணோ கனிமவளத்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் சிக்கி உள்ளார். மந்திரவாதிகளின் பேச்சைக் கேட்டு செயல்பட்டால் முடிவில் என்ன மாதிரியான நிலை உருவாகும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments