கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற 3 கோடியே 60 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுக்கள் பறிமுதல்

0 659

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வேனில் கடத்த முயன்ற 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக- தமிழக எல்லையான சத்தியமங்கலம் வழியாக வேனில் கள்ளநோட்டுக்கள் கடத்தப்படுவதாக சாம்ராஜ்நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாளவாடி அருகே, அட்டுக்குழிபுரம் பகுதியில் கர்நாடக போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது தமிழகம் நோக்கி வந்த வேனை மறித்து சோதனை செய்ததில், வேனின் பின்புறம் பொருட்கள் வைக்கும் இடத்தில் ரகசிய அறை அமைத்து, அதில் கட்டு கட்டாக புதிய ரூபாய் நோட்டுக்களை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில், அவை கள்ளநோட்டு என்றும்,அதன் மதிப்பு 3 கோடியே 60 லட்சம் ரூபாய் எனவும் தெரியவந்தது.

மேலும் வேனில் வந்த 4 பேரில் 3 பேர் போலீஸ் சோதனையின் போது அங்கிருந்து தப்பி சென்றனர். இருப்பினும் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், தான் பெங்களூருவை சேர்ந்தவன் என்றும், தன்னுடன் வந்தவர் பணத்துக்காக வாகனத்தை ஓட்ட அழைத்ததால், தான் வாகனத்தை ஓட்டி வந்ததாகவும், வேனில் கள்ளநோட்டு இருந்தது தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments