பார் கவுன்சில் பதவியேற்பு நிகழ்ச்சி..!

0 344

ஹெல்மெட் அணியாத வழக்கறிஞர்களை, ஒன்வே சாலையில் சென்று விட்டு போலீசாரிடம் சண்டையிடும் வழக்கறிஞர்களை, அராஜகம் செய்யும் வழக்கறிஞர்களை பார் கவுன்சில் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து விதிமீறலுக்காக வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற நீதிபதி கிருபாகரனின் கருத்தில் உடன்பாடு இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி கூறியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் பி.எஸ்.அமல்ராஜ், எஸ்.பிரபாகரன், ஆர்.விடுதலை, ஆர்.சி.பால்கனகராஜ், கே.பாலு, ஜி.மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட 25 உறுப்பினர்களுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

image

இந்நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், சட்டம் தெரிந்த வழக்கறிஞர்கள், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களை பணியில் இருந்து விலக்க வேண்டும் என புது நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூறினார். கருப்பு அங்கி என்பது, விதிகளை மீறுவதற்கான உரிமம் அல்ல என்பதை வழக்கறிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் வழக்கறிஞர்களிடம் இருந்து பாதுகாக்கவே சி ஐ எஸ் எப் வீரர்கள் பாதுகாப்புக்கு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உத்தரவிட்டார் என நீதிபதி ராஜா நினைவு கூர்ந்தார். 

அளவுக்கு அதிகமாக சட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டதால், தற்போது வழக்கறிஞர்கள் வழக்கை தேடிப்பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று நீதிபதி கிருபாகரன் கூறினார். ஹெல்மெட் அணியாத வழக்கறிஞர்களை, ஒன்வே சாலையில் சென்று விட்டு, போலீசாரிடம் சண்டையிடும் வழக்கறிஞர்களை அராஜகம் செய்யும் வழக்கறிஞர்களை பார் கவுன்சில் நிர்வாகிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி டி.எஸ்.சிவஞானம், பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் ஏற்று, பதவியேற்பது இதுவே முதல் முறை எனவும், பிற மாநிலங்களில் இதுபோன்ற நடைமுறை இல்லை என பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் மக்களவை தேர்தலைப் போல நடந்ததாகக் குறிப்பிட்ட நீதிபதி சசிதரன், புதிய தலைமுறை வழக்கறிஞர்கள், வருமானத்துக்காக விதிகளுக்கு புறம்பான பணிகளில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியாக பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி, போக்குவரத்து விதிமீறலுக்காக வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்ற நீதிபதி கிருபாகரனின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றார். வழக்கறிஞர்கள் சட்டப்படி, புகாரில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments