மெட்ரோ ரயில்களில் சுமார் 4 மணி நேரம் இலவச பயணம் மேற்கொண்ட பயணிகள்

0 963

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுமார் 4 மணி நேரம் இலவசமாக பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்திலும், பயணச்சீட்டு எந்திரங்களில் காலை 6 மணி முதல் கோளாறு ஏற்பட்டது.

இதனால் பயணிகளுக்கு டோக்கன்களுக்கு பதிலாக கையால் எழுதப்பட்ட பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் டோக்கன் மூலம் திறக்கும் தானியங்கி கதவுகளும் இயங்கவில்லை.

பணியில் இருந்து காவலாளிகள், தங்களிடமிருந்து ஆக்சஸ் கார்டு மூலம் பயணிகளை அனுமதித்தனர். அதேசமயம் தொழில்நுட்பக் குழு வரவழைக்கப்பட்டு சரிசெய்யும் பணி நடைபெற்றது.

கோளாறை உடனடியாக சரிசெய்ய முடியாத நிலையில், பயணிகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.  சுமார் 4 மணி நேரம் கழித்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு, வழக்கம்போல கட்டணம் வாங்கிக் கொண்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஜூலை மாதம் மட்டும் நான்கு முறைக்கு மேல், தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மழைக்காலத்தில் சில ரயில் பெட்டிகளில் நீர் ஒழுகுவதாகவும், கண்ணாடி உடைந்து விபத்துகள் நடப்பதாகவும் கூட புகார்கள் எழுந்தன.

இன்று காலை தானியங்கி பயணச்சீட்டு எந்திரங்கள் மற்றும் தானியங்கி கதவுகளில் கோளாறு ஏற்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டது.  பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாததே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments