அத்திவரதரை தரிசிக்க - அலை, அலையாய் பக்தர்கள்..!

0 1390

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்காக ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டனர். அத்திவரதர் தரிசனத்திற்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளதால் காஞ்சிபுரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே, காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் அத்திவரதர் சிலை தரிசன விழா கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. இதில் முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

அத்திவரதரை வழிபட தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் காஞ்சிபுரம் நகரமே திக்குமுக்காடி வருகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் ஓய்வு எடுக்கவும் ஆங்காங்கே கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி செய்யப்பட்டு உள்ளது.

விழாவின் 46-வது நாளான இன்று அத்திவரதர் மலர்களால் ஆன புஷ்ப அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். சுதந்திரதின விடுமுறை நாள் என்பதாலும், நாளையுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைய உள்ளதாலும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. காந்தி ரோடு, ரங்கசாமி குளம், செட்டித்தெரு, பெரியார் நகர், முத்தியால்பேட்டை ஆகிய இடங்களில் கயிறு மூலம் தடுப்பு ஏற்படுத்தி பக்தர்களை நிறுத்தி, நிறுத்தி அனுப்பினார்கள்.

இதேபோல் ஓய்வு எடுக்க அமைக்கப்பட்டு உள்ள கீழ்கதிர்பூரில் உள்ள 2 கூடாரங்கள், பெரியார் நகர் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்ட கூடாரம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி கருட சேவை நடைபெற்றதால், மாலை 5.30 மணியோடு அத்திவரதர் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதே நேரத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் அத்துடன் நிறைவும் பெற்றது. இனிமேல் முக்கிய பிரமுகர் தரிசனம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் இரவு 7 மணி அளவில் வாகன மண்டபத்தில் கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு தீபாரதனை ஆராதனை நடைபெற்றது இதனை தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் மாடவீதிகளில் வீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெற்று கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

இதன் பின்னர் இரவு 8 மணி அளவில் அத்தி வரதர் நடை திறக்கப்பட்டு பொது தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவு இரண்டு மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் நடை அடைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு அத்திவரதர் நடை திறக்கப்படும். அப்போது முதல் அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்திவரதர் சிலையை தரிசிக்க நாளை தான் கடைசிநாள் என்பதால் மிக அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வருகிற 17-ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் அதன் பின்னர் நடை அடைக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இதன் பின்னர் அத்திவரதர் சிலையை தெப்பக்குளத்தில் எழுந்தருளச் செய்வதற்கான சிறப்பு யாகங்கள் நடைபெறும். இந்த யாகங்கள் முடித்த பின்னர் அத்திவரதர் சிலைக்கு சிறப்பு தைலகாப்பு செய்யப்படும். மூலிகைகளால் ஆன தைலம் பூசப்படும்.

இதன் பின்னர் 17-ஆம் தேதி மதியம் மூன்று மணி முதல் மாலை 6 மணிக்கும் அத்திவரதரின் சிலை அனந்த சரஸ் தெப்பக்குளத்தில் உள்ள நீரடி மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்படும். முறைப்படி பூஜைகள் செய்து அந்த மண்டபம் மூடப்படும். இதன் பின்னர் அடுத்த நாற்பது ஆண்டுகள் கழித்து, 2059 ஆம் ஆண்டில் மீண்டும் அத்திவரதர் சிலை தரிசனத்திற்காக குளத்தில் இருந்து மீண்டும் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments