செல்போன் பறித்த இளம் காதல் ஜோடி கைது

0 646

சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் பிரசன்னா லிப்சா. தேனாம்பேட்டையைச் சேர்ந்த இவர் திங்கள் கிழமை அன்று மாலை தனது தோழி ஒருவருடன் ஜி.என்.செட்டி சாலை ஓரம் நடந்து சென்றார்.

வலது கையில் செல்போனை வைத்துக் கொண்டு அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண்ணுடன் தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த நபர், பிரசன்னா லிப்சா வைத்திருந்த செல்போனை லாவகமாக பறித்து விட்டு தப்பிச் சென்றார்.

செல்போனை பறிகொடுத்த அந்தப் பெண், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செல்போன் பறித்துச் சென்றவனின் பின்னால் பெண் அமர்ந்திருந்ததாக பிரசன்னா லிப்சா கூறவே, உதவி ஆய்வாளர் வெங்கடேசன், தலைமைக் காவலர் பொன்னுவேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

செல்போன் பறிப்புச் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்த்து போலீசாரே அதிர்ந்து போயினர். கொள்ளையனும், அந்தப் பெண்ணும் சென்ற வழிகளில் எல்லாம் உள்ள சிசிடிவிக்களை போலீசார் ஆராய்ந்த போது செல்போன் பறிப்புக்கு அவர்கள் நோட்டமிட்டது உறுதியானது. அந்த இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து ஆராய்ந்த போது, அது திருட்டு வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு பின்புறம் இருந்து அந்த வாகனத்தை கொள்ளையன் திருடி இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். மேலும் வாகனத்தைத் திருடி வரும் வழியில் கிண்டி கத்திப்பாரா பாலத்தில் ஒருவரிடம் அவர்கள் செல்போனைப் பறித்ததாகவும் போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிசிடிவி காட்சிகளின் உதவியோடு அந்தக் கொள்ளையனையும், பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்தக் கொள்ளையன், சூளைமேட்டைச் சேர்ந்த டாட்டூ வரைகலைஞன் ராஜூ என்பதும், அந்தப் பெண் கரூரைச் சேர்ந்த சுவாதி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சுவாதி, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி விசுவல் கம்யூனிகேசன் படித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர். ராஜூ மீது ஏற்கெனவே வடபழனி காவல் நிலையத்தில் வாகனத் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறியுள்ள போலீசார், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமாகி உடலில் டாட்டூ வரைவதற்காக ராஜூவை அணுகிய போது சுவாதிக்கு காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

முதலில் கல்லூரி விடுதியில் தங்கிய சுவாதி பின்னர் காதலன் உதவியோடு சைதாப்பேட்டையில் அறை எடுத்து தங்கியதாகக் கூறப்படுகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வாங்கவும், மாமல்லபுரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு ஜோடியாக சென்று வருவதற்காகவும் அவர்கள் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இரண்டு செல்போன்களையும் பறித்து பர்மா பசாரில் விற்றுவிட்டு இருவரும் போதைப் பொருள் வாங்கிப் பயன்படுத்தியதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். செல்போன் பறிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments