தமிழகத்தில் ஆப்ரேஷன் நம்பர் பிளேட்..!

0 318

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணமாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 16 மண்டலங்களில் ஆப்ரேஷன் நம்பர் பிளேட் என்ற பெயரில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும், பதிவு எண் இல்லாத வாகனங்களை கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது.

நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை டிஜிபி அருண்குமார் உத்தரவின் பேரில் தெற்கு ரயில்வே எல்லைக்கு உட்பட்ட 16 மண்டலங்களிலும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆப்ரேஷன் நம்பர் பிளேட் என்ற பெயரில் சோதனை நடத்தினர்.

இதில் ரயில் நிலையங்களை ஒட்டி அமைந்துள்ள இருச்சக்கர வாகனம் நிறுத்தும் இடங்களில் பதிவு எண் இல்லாத வாகனங்கள் மற்றும் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது.

செயின் பறிப்பு, கடத்தல் உட்பட குற்ற சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், விபத்துகளை ஏற்படுத்திய வாகனங்கள் ரயில் நிலையங்களுக்கு அருகே நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டு கிடப்பதாக வந்த புகார்களை அடுத்தும், சுதந்திர தினத்தின் போது எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இந்த சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் 228 இருச்சக்கர வாகனங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 866 இருச்சக்கர வாகனங்கள் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடப்பதாகவும், பதிவு எண் இல்லாமல் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பதிவு எண் இருக்கும் வாகனங்களின் எண்கள் அந்த வாகனம் கண்டறியப்பட்ட ரயில் நிலையத்தின் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டு, வாகனத்தின் விபரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments