அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

0 1153

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட மறுத்துள்ள உயர்நீதிமன்றம் இது தொடர்பாக தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அனந்தசரஸ் குளத்தில் குப்பை கூளங்கள் இருப்பதாகவும் அதனை சுத்தப்படுத்தாமல் குளத்தில் அத்திவரதரை வைத்துவிட்டால் மீண்டும் 40 ஆண்டுகளுக்கு குளத்தை சுத்தப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் ஏற்கனவே ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த வழக்கில் சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் தரப்பில் ஒரு இணைப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்ய வேண்டியிருப்பதால் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரப்பட்டது. அப்போது அது குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

தரிசனத்தை நீட்டிக்கப் போவதில்லை என அறநிலைய துறை அமைச்சர் அறிவித்துள்ளதாக அரசுத்தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தரிசனத்தை நீட்டிக்கக் கோரி தனி வழக்கோ, பொது நல வழக்கோ தான் தொடரமுடியுமே தவிர மற்றொரு வழக்கில் இணைப்பு மனுவாகத் தாக்கல் செய்ய முடியாது என்று தெரிவித்த நீதிபதி, மனுவை திரும்பப் பெறாவிட்டால் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்போவதாக எச்சரித்தார். இதையடுத்து மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments