அரசியல் அல்லாத வழக்குகளில் சிபிஐ சிறந்த பணியாற்றுகிறது

0 238

அரசியல் தொடர்பு இல்லாத வழக்குகளில், சிபிஐ சிறப்பாக செயல்படுவது எப்படி என்பது குறித்தும், ஏன்? என்பது பற்றியும், தனக்குத் தானே, கேள்வி எழுப்பிக் கொள்வதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்திருக்கிறார்.

சிபிஐ அமைப்பின், நிறுவனரும், அதன் முதல் இயக்குநருமான, D.P.கோலி நினைவாக, டெல்லியில், 18ஆம் ஆண்டாக நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய தலைமை நீதிபதி  அரசியல் தலையீடு மற்றும் சமூகத்தில் உள்ள மிகப்பெரிய நபர்கள் தொடர்பான வழக்குகளில், சில சமயங்களில் சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பதும், நீதித்துறையின் தரத்தை சிபிஐ.யால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதும், எதார்த்தமான உண்மை என்றார்.

மத்திய கணக்குத் தணிக்கை அமைப்பான, CAG போன்று, முழுக்க, முழுக்க, சுயாட்சி கொண்ட அமைப்பாக சிபிஐ மாற்றப்பட வேண்டும் என்று, இதற்கு ஏற்ற வகையில், முதலில், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து, சிபிஐ விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நிறுவன அமைப்பு, செயல்பாடுகள், அதிகார வரம்புகள், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், ஒரு விரிவான சட்டத்தை கொண்டு, சிபிஐ அமைப்பை மேலும் வலுவுள்ளதாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

எந்தவொரு பொதுநிறுவனத்தின் வெற்றியைக் காட்டிலும், தோல்விதான் மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி, அரசியல் சார்ந்த வழக்குகளில், சிபிஐ.யின் செயல்பாடு சரியான வகையில் இல்லை என்றார். அதேநேரம், அரசியல் இல்லாத வழக்குகளில் மட்டும் சிபிஐ நன்றாக வேலை செய்வது ஏன்? என தமக்கு தானே, கேள்வி எழுப்பிக் கொள்வதாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments