எஜமானியின் சடலத்துடன் நாய் பாசப்போராட்டம்..! நன்றிக்கு இது தான் முகவரி

0 661

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தனது எஜமானியின் சடலத்தை துக்கிச்செல்ல விடாமல் வளர்ப்பு நாய் ஒன்று நடத்திய பாசப்போராட்டம் குடும்பத்தினரையும் காவல்துறையினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது

காலனாவுக்கு பிஸ்கட் வாங்கி போட்டாலே காலமெல்லாம் காலடியில் காத்திருந்து காவல் காக்கும் உன்னதமான நன்றியுள்ள ஜீவன் நாய்..!

அதனை மெய்ப்பிக்கும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரத்தில் நடந்துள்ளது.

வெங்களாபுரம் பகுதியில் வசித்துவந்த தனசேகர் என்பவர் தனது வரவுக்குமீறி கடன்களை பெற்று அதனை திருப்பி செலுத்த இயலாமல் திண்டாடியுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தனது மனைவி ராதா மற்றும் இரு குழந்தைகளை தவிக்க விட்டு தனசேகர் தலைமறைவாகிவிட்டார்.

இதனால் ராதா கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார். தனசேகருக்கு கடன் கொடுத்தவர்கள் இவரது மனைவி ராதா விடம் கடனை திரும்ப கேட்டு தினமும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த கஷ்டத்திலும் ராதா தனது பாதுகாப்புக்காக நாய் ஒன்றை பாசம் காட்டி வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் கடன்கொடுத்தவர்கள் ஆபாசமான வார்த்தைகளால் வசைபாடியதால் மனம் உடைந்த ராதாவீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பத்தூர் ரூரல் காவல் துறையினர் ராதாவின் உடலை பிணகூறாய்வுக்காக எடுத்து செல்ல முயன்ற போது அவரது சடலத்தை எடுக்கவிடாமல், ராதா வளர்த்த நாய் சடலத்தின் அருகிலேயே அமர்ந்து கொண்டது.

கடன் தொல்லைக்கு பயந்து தாலி கட்டிய கணவர் கைவிட்டு ஓடிவிட, உறவினர்கள் பலரும் துக்கம் கேட்கக் கூட வரத் தயங்கிய நிலையில் வாயில்லாத ஜீவன் தனது எஜமானியின் மீது கொண்ட விஸ்வாசம் காரணமாக அவரைத் தொட விடாமலும் அவரை யாரும் நெருங்க விடாமலும் சுற்றி சுற்றி வந்தது காண்போர் நெஞ்சை கண் கலங்கச் செய்தது.

ஒரு கட்டத்தில் காவல்துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாயை சங்கிலியால் கட்டி ராதாவின் மகள் இழுத்துச்சென்ற பின்னர் உறவினர்கள் சடலத்தை சுற்றி அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

அதன்பின்னர் ராதாவின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது தாய் தந்தை இல்லாமல் அனாதையான அந்த இரு குழந்தைகளுக்கும் காவலாக உள்ளது அந்த நன்றியுள்ள ஜீவன்..!

நன்றி என்பது வெறும் சொல் அல்ல செயல் என்பதை மீண்டும் ஒருமுறை மனிதம் மறந்த மனிதர்களுக்கு உணர்த்தி இருக்கின்றது இந்த வாயில்லா ஜீவன்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments