மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்த மாணவர்கள்-காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்ய உத்தரவு

0 421

மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி மாணவர்கள் 8 பேரும் சுதந்திர தினத்தன்று காமராஜர் இல்லத்தை காலை முதல் மாலை வரை சுத்தம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் பயின்று வரும் 8 மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்ததால், அவர்களை கல்லூரி நிர்வாகம் 3ம் ஆண்டு வகுப்புகளில் அனுமதிக்கவில்லை.

தங்களை 3ம் ஆண்டு வகுப்பில் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி அந்த மாணவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மாணவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றாலும், 3ம் ஆண்டில் கல்லூரியிலிருந்து வெளியேற்றினால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

மேலும் மனுதாரர்கள் தங்கள் தவறை உணர்ந்து, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கல்லூரியில் ஒழுங்காக நடப்பதாக உறுதியளித்திருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

எனவே வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று 8 மாணவர்களும் விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அங்கு வரும் பார்வையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதோடு, மாலை 4 மணி முதல் 6 மணி வரை மதுஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நினைவில்லத்துக்கு வெளியே பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறிய நீதிபதி, பதாகைகளில் இடம்பெற வேண்டிய வாசங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர்கள் நடந்து கொள்கிறார்களா என்பதை கல்லூரி முதல்வர் உதவிப் பேராசிரியர் ஒருவரை நியமித்து கண்காணிக்க வேண்டும் எனவும், உதவிப் பேராசிரியர் மனுதாரர்களின் செயல்பாடு குறித்து கல்லூரி முதல்வரிடம் மறுநாள் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையை பெற்றதும் மனுதாரர்களிடம் உரிய கல்விக் கட்டணத்தை பெற்றுக்கொண்டு 3ம் ஆண்டு வகுப்பில் கல்லூரி முதல்வர் அனுமதிக்க வேண்டும் எனவும், மனுதாரர்களின் செயல்பாடுகளை விருதுநகர் டவுன் காவல் ஆய்வாளரும் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறினால் மனுதாரர்கள் மீதான, கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முடிவை செயல்படுத்த கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி, உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மனுதாரர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோர்ஆகஸ்ட் 19ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments