அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு..

0 1239

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நிறைவடைய இன்னும் 3 நாட்களே உள்ளதால், லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் தரிசன நாட்கள் மேலும் நீட்டிப்பு இல்லை என்று அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வரதராஜபெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் அத்தி வரதர் வைபவத்தின் 44 ம் நாளான இன்று இளம் பச்சை மற்றும் இளம் ஆரஞ்சு வண்ண பட்டாடை அணிந்தும், தோள் மற்றும் கைகளில் 8 கிளிகளுடன், கிரீடம் சூட்டியும், பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், இன்றும் லட்சக்கணைக்கில் திரண்டனர்.

வரும் 16 ந் தேதியுடன் தரிசனம் நிறைவடைவதால் காஞ்சிபுரம் நோக்கி மக்கள் சென்றவண்ணம் இருக்கிறார்கள். வெயில் சுட்டெரித்த நிலையில் பிற்பகலில் மழை பெய்ததால் நனைந்தபடி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

3 கிமீ தூர வரிசையில், 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் வந்து தரிசித்து செல்கிறார்கள். பஸ் நிலையங்களில் இருந்து கூடுதலாக மினி பேருந்துகள் தவிர, நகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. நேற்று நள்ளிரவு 2 மணி வரை பொது தரிசனம் அனுமதிக்கப்பட்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். கடந்த 43 நாட்களில் 89 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 3 நாளில் தரிசனம் நிறைவடைவதால், அடுத்த 40 ஆண்டுகளுக்கு அத்திவரதரை குளத்தில் வைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளம் மற்றும் அத்திவரதர் மண்டபம் ஆகியவற்றை சீரமைக்கும் பணியில் 50 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குளத்தை தூர் வாரி வர்ணம் பூசப்பட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில் அத்திவரதர் தரிசன நாட்கள் நீட்டிக்கப்படாது என்றும், ஆகமவிதிப்படி 48 நாட்கள் மட்டுமே தரிசனம் நடைபெறும் என்று திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். .

இதற்கிடையே அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி ஆதிகேசவலு முன் தமிழரசி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முதியோர் உள்ளிட்ட லட்சக்கணக்கானவர்கள் இன்னும் தரிசிக்காததால் மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments