த(க)ண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்.. 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

0 491

கேரளாவில், கனமழை-வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 88ஆக உயர்ந்திருக்கிறது. 40 பேரை காணவில்லை என்பதால், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

கேரளாவில், கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கிறது. வயநாடு மாவட்டத்தில் புத்துமலை, மலப்புரம் மாவட்டத்தின் காவாலப்பாறா உள்ளிட்ட 80 இடங்களில், பெரியதும், சிறியதுமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

ஆயிரத்து 413 முகாம்களில், இரண்டரை லட்சம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, இடுக்கி உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

மலப்புரம் மாவட்டத்தின் நிளம்பூர் அருகே கவளப்பாறா பகுதியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, மண்ணில் புதைந்தவர்களில், மேலும், 6 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மண்ணில் புதையுண்டிருக்கும் 45 பேரது உடல்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

வயநாடு மாவட்டத்தின் குறிச்சியாறுமலை நீர்த்தேக்கத்தையொட்டி வசித்து வரும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில், கனமழை மற்றும் வெள்ளத்தால், தாழ்வான பகுதிகளில், தண்ணீர் மட்டம் உயர்வதால், பொதுமக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்திருக்கின்றனர்.

இதற்கிடையே, கனமழை வெள்ளத்தை பயன்படுத்தி, நல்ல பல உள்ளங்கள் நிவாரண உதவிகள் அளித்து வரும் நிலையில், அதிலும், சில போலிகள் கிளம்பியுள்ளனர்.

கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு கூறி, இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும், போலியாக விளம்பரம் வெளியிடுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து சைபர் கிரைம் உதவியோடு விசாரணை நடத்திய கேரள காவல்துறை, போலியாக நிவாரணம் திரட்ட முயன்ற வகையில், 19 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments