பெண் சாராய வியாபாரியுடன் சேர்ந்து மது கடத்திய காவல் ஆய்வாளர்

0 905

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் ஒருவர் பெண் சாராய வியாபாரியுடன் சேர்ந்து காரில் மது கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் சாவடி பகுதியில் மதுவிலக்கு அமல்பிரிவின் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. சனிக்கிழமையன்று இங்கு காவலர்கள் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மகிந்திரா பொலீரோ கார் ஒன்றை மடக்கி சோதனை செய்ய முற்பட்டபோது, காரை ஓட்டி வந்த நபர் தப்பியோடியுள்ளார்.  காரை சோதனை செய்த போலீசார், 168 புதுச்சேரி மது பாட்டில்கள், 30 லிட்டர் கள்ளச்சாராயம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அத்துடன் காரில் வந்த சமுத்திரக்கனி என்ற பெண்ணை கைது செய்தனர். அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

காரிலிருந்து இறங்கி தப்பியோடிய நபர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் ஆய்வாளர் சுந்தரேசன் என்பது தெரியவந்தது. விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வந்த சுந்தரேசன், அண்மையில்தான் கடலூருக்கு மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் அவர் பணியாற்றியபோது பெண் சாராய வியாபாரி சமுத்திரக்கனியுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சமுத்திரகனியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே, சீர்காழி அருகிலுள்ள சட்டநாதபுரத்திற்கு அவர் இடம் மாறியுள்ளார். தனது பழைய நட்பை பயன்படுத்தி காவல் ஆய்வாளர் சுந்தரேசனுடன் சேர்ந்து அவரது சொந்த காரிலேயே புதுச்சேரியிலிருந்து சீர்காழிக்கு மதுபானங்களை கடத்தி வந்துள்ளார் சமுத்திரக்கனி. 

சமுத்திரக்கனி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் ஆய்வாளர் சுந்தரேசனின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகவுள்ள சுந்தரேசன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments