காஷ்மீர் விவகாரத்தில் துரோகம்.. வைகோ பேச்சுக்கு காங். கண்டனம்..!

0 1443

காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்தது எனப் பேசிய வைகோவுக்கு, கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தீர்மானம் மற்றும் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை, நாடாளுமன்ற மாநிலங்களவையில், கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன் மீதான விவாதத்தில் பேச, மதிமுக பொதுச்செயலாளரும், அக்கட்சியின் ஒரே எம்.பி.யுமான வைகோ, அனுமதி கோரினார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா எழுந்து, வைகோவை பேச அனுமதிக்குமாறும், அவரது பேச்சை கேட்க ஆவலாக இருப்பதாகவும், கூறினார்.

இதையடுத்து, 3 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 10 நிமிடங்கள் பேசிய வைகோ, காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸ் செய்த தவறுகளை பட்டியலிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

காஷ்மீரை, இந்தியோவோடு இணைக்க, ஜவஹர்லால் நேரு ஏற்படுத்திய ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி தான் காஷ்மீர் மக்களின் தலைவிதியோடு விளையாடி மோசடி நாடகத்தை அரங்கேற்றியதாக குற்றம்சாட்டினார்.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, காங்கிரஸ் தயவால், தாம், எம்.பி ஆகவில்லை என்றும், திமுக எம்.எல்.ஏக்களால், தாம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், வைகோ தெரிவித்தார். காஷ்மீர் மசோதாவின்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் 12 பேர் வாக்களிக்கவில்லை என்றும், அவர்கள் எல்லாம் மத்திய அரசிடம் பணம் வாங்கி விட்டார்களா? என்றும், வைகோ கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடியை நேருக்கு நேர் பார்த்து தவறை சுட்டிக்காட்டும் தைரியம், தமக்கு இருப்பதாகவும், வைகோ தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தயவு இல்லாமல், எம்.பி ஆனதாக வைகோ சொல்வது தர்மம் இல்லை என்றார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி என்ற அழகான சிற்பத்தை உருவாக்கி இருக்கிறார், அதை ஏதாவது பேசி, வைகோ உடைத்து விடக்கூடாது என்றும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார். தவறான தகவல்களை, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு வழங்கியதன் மூலம் அவரது மரணத்திற்கு காரணமாக இருந்தவர் வைகோ என்றும், கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments