கல்வி உதவித்தொகை வழங்கப்படாததால் நிதி நெருக்கடியில் தள்ளாடும் தனியார் பொறியியல் கல்லூரிகள்

0 278

பொறியியல் கல்வி பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசின் உதவித்தொகை நிதி 15 மாதங்களாக வழங்கப்படாததால், தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில், ஒவ்வொரு ஆண்டும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் பட்டியலின மாணவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.

கல்வி கட்டணம் செலுத்துவதற்காக வழங்கப்படும் அந்த உதவித் தொகை, நேரடியாக மாணவர்கள் பயிலும் கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பப்படும். 2018 - 2019-ம் ஆண்டுக்கான பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகையை இதுவரை தமிழக அரசு சுயநிதி கல்லூரிகளுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2018 - 2019-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்ந்த பட்டியலின மாணவர்கள், அதே ஆண்டில் 2, 3 மற்றும் இறுதியாண்டில் பயின்ற பட்டியலின மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட வேண்டிய உதவித்தொகை வழங்கப்படவில்லை.

15 மாதங்களாக பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகையை, தமிழக அரசு வழங்காததால், தனியார் கல்லூரி நிர்வாகங்கள் நிதிப்பற்றாக்குறையில் தள்ளாடுகின்றன. ஏற்கனவே மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால், கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கு, இது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

2018 - 2019-ம் ஆண்டில் பயின்ற சுமார் 60,000 பட்டியலின மாணவர்களுக்கு 500 கோடி ரூபாய் தமிழக அரசின் நிதியாக வழங்கப்பட வேண்டும் என்றும், 15 மாதங்களாக அந்த நிதி விடுவிக்கப்படாததால், நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2017-2018 ஆம் ஆண்டில் 85,000 ரூபாயாக இருந்த நிர்வாக ஒதுக்கீட்டுகான கட்டணம், 2018-19-ல் 55,000 ரூபாயாக குறைக்கப்பட்டதாகவும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சராசரியாக ஒவ்வொரு சுயநிதி பொறியியல் கல்லூரிக்கும் 1 கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாய் வரை அரசின் நிதி விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் கல்லூரி கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அரசு நிதி ஒதுக்காத காரணத்தால், கல்லூரி நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியவில்லை என்றும், பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகனிடம் கேட்டபோது, தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஸ்காலர்ஷிப் இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல் என்றார்.

ஓராண்டுக்கு மட்டுமே நிதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், ஆதிதிராவிட நலத்துறை மூலமாக அந்த பணமும் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments