ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவு நீக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வரவேற்பு

0 701

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவு நீக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ள பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காஷ்மீர் விவகாரத்தில் தேசிய ஒருங்கிணைப்புக்காக வலிமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கும் மத்திய அரசின் முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.


ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்றுப் பிழையை சரிசெய்ததற்காக பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். தேசத்தின் ஒருங்கிணைப்புக்கான முக்கிய முடிவு இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராம்மாதவ் டுவிட்டரில் பிரதமர் நரேந்திரமோடியின் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மோடியின் பின்னணியில் ஒரு பேனர் உள்ளது. அதில் 370வது சட்டப்பிரிவை நீக்கி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்துடன்,வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என்று ராம் மாதவ் கருத்து பதிவிட்டுள்ளார். 7 தசாப்தங்களாக இருந்த நாட்டு மக்களின் கோரிக்கை நமது கண்முன்பே நிறைவேறி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா கட்சியும் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை மத்திய அரசு நீக்கியிருப்பதன் மூலம் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் கனவு நிறைவேறியிருப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இன்று இந்தியா முழு சுதந்திரம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிவசேனா கட்சி சார்பில் மும்பையில் இனிப்புகளும் வழங்கப்பட்டன.


இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்றும், பெருமை கொள்வதற்கான தருணம் என்றும் யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீரில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் முடிவு மிகவும் துணிச்சலானது என்றும், நாட்டின் நலனுக்கு மிகவும் அவசியமானது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் முடிவை உளப்பூர்வமாக வரவேற்பதாக டுவிட்டரில் ஆர்எஸ்எஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments