கோகோ கோலாவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்..! கோவை பெண் வழக்கில் தீர்ப்பு

0 2822

பாலித்தீன் பேப்பர் உடன் தரமற்ற முறையில் குளிர்பானம் தயாரித்து விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கோகோ கோலா நிறுவனம், கோவையில் உள்ள ஆதரவற்ற 100 குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ரூ 1 லட்சம் மதிப்பிலான சத்துள்ள பழங்களையும், உணவு பொருட்களையும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நீண்ட காலமாக கடைகளில் விற்பனை செய்யப்பட்டாலும் தமிழகத்தில் 15 வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜயால் விளம்பரப்படுத்தப்பட்ட கோகோ கோலா பட்டி தொட்டியெல்லாம் சென்று சேர்ந்தது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி தமிழகத்தில் கோகோ கோலா கம்பெனி பொருட்களின் விற்பனை முற்றிலும் முடங்கியது. இப்படிப்பட்ட சர்ச்சைக்குள்ளான நிறுவனத்திற்கு தான் கோவை நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சவுத் வெஸ்ட் ஏசியாவின் தலைவராக கே.கே என்று செல்லமாக அழைக்கப்படும் கிருஷ்ணகுமாரை தலைவராக கொண்டு செயல்படும் கோகோ கோலா நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 54 உற்பத்தி நிலையங்கள் உள்ளது. தமிழகத்தில் கங்கைகொண்டான் ,திருவள்ளூர் உள்ளிட்ட 6 பகுதிகளில் உறப்பத்தி நிலையங்கள் உள்ளன.

இங்கிருந்து தான் நிலத்தடி நீரை உறிஞ்சி அதனை கோலாவாக பாட்டிலில் அடைத்து கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றது. அந்தவகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு கோவை சி.எம்.சி காலணியை சேர்ந்த பூர்ணிமா என்பவர் அதே பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் கோகோ கோலா பட்டில் ஒன்றை 12 ரூபாய் விலை கொடுத்து வாங்கிச் சென்றுள்ளார்.

பாட்டிலை திறப்பதற்கு முன்பாக பாட்டிலுக்குள் பாலித்தின் பேப்பர் ஒன்று கிடப்பதை பார்த்து கடையில் புகார் தெரிவித்துள்ளார். கடைக்காரரான ஜவகர்ராஜா என்பவர் கம்பெனியில் போய் கேளுங்கள்... என்று பேசியதாக கூறப்படுகின்றது.

இதனால் மன உளைச்சல் அடைந்த பூர்ணிமா, தரமற்ற முறையில் பாலித்தீன் பேப்பருடன் கொகோ கோலா தயாரித்து விற்பனைக்கு அனுப்பிய கோகோ கோலா நிறுவனம் மற்றும் அதனை விற்ற மளிகை கடைக்காரர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 5 வருடமாக நடந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் கோகோ கோலா நிறுவனத்திற்கு 75 ஆயிரம் ரூபாயும், கடைக்காரருக்கு 25 ஆயிரம் ரூபாயும், மொத்தம் 1 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் இந்த 1 லட்சம் ரூபாய்க்கு ஆதரவற்ற 100 குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சத்துள்ள பழங்களையும், உணவு பொருட்களையும் வாங்கிக் கொடுக்க கொகோ கோலா நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. துணிச்சலுடன் 5 வருடமாக வழக்கை நடத்திய பூர்ணிமாவிற்கு வழக்கு செலவிற்காக 3 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மசோதாவில் தரமற்ற பொருட்களுக்கு கோடிகளை பெற்றுக் கொண்டு விளம்பரம் செய்யும் நடிகர் நடிகைகள் மீதும் வழக்கு பாயும் என்று புதிய ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளதால், இனி வரும் காலங்களில் விளம்பரம் செய்யும் நடிகர் நடிகைகளுக்கு சிக்கல் உருவாகியுள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments