வங்கி அதிகாரிகள் கெடுபிடி பால் விவசாயி தற்கொலை..!

0 735

தொழிலை மேம்படுத்த நண்பர்களுடன் சேர்ந்து வாங்கப்பட்ட வங்கி கடனில், தனது பங்கினை மட்டும் திருப்பி தர முன்வந்தும், முழு கடனையும் அடைக்காமல் நிலபத்திரங்களை தர முடியாது என வங்கி நிர்வாகம் மறுத்ததால் மனமுடைந்த விவசாயி வங்கியிலேயே விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம் சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்த விவசாயி பூபதி மற்றும் அவரது நண்பர்கள் 23 பேர் சேர்ந்து சப்தகிரி மில்க் புராடக்ட் என்ற பெயரில் பால் பண்ணை ஒன்றை தொடங்கி உள்ளனர். சிறிது காலத்தில் தொழில் மந்தமடைந்ததால், அதனை மேம்படுத்த 2005ஆம் ஆண்டு கோவை வெரைட்டி ஹால் பகுதியில் இருக்கும் இந்தியன் வங்கியில் தங்கள் பண்ணையின் பத்திரத்தை வைத்து கடன் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கேட்கும் கடன் தொகைக்கு பண்ணையின் பத்திரம் மட்டும் போதுமானதாக இருக்காது என்று வங்கி நிர்வாகம் கூறியதால், அவர்கள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான நிலங்களின் பத்திரங்களை கொடுத்து வங்கியில் இருந்து 9 கோடியே 93 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளனர்.

கடன் வாங்க கொடுக்கப்பட்ட நில பத்திரங்களில், பூபதி வழங்கிய பத்திரங்களின் மதிப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து. கடன் வாங்கப்பட்ட தொகையை முதலீடு செய்த பின்னும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியை செலுத்தாமல் வந்துள்ளனர். இதனால் கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 20 கோடி ரூபாயை எட்டி உள்ளது.

கடன் சுமை கழுத்தை நெறிக்க, தான், தொழிலில் இருந்து விலகி கொள்வதாக பூபதி தனது தொழில் கூட்டாளிகளிடம் தெரிவித்துள்ளார். மற்றவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் கடன் தொகையையும், வட்டித்தொகையையும் செலுத்தாததால், இதனை வராக்கடன் பட்டியலில் வங்கி நிர்வாகம் சேர்த்துள்ளது. இதனையடுத்து கடன் பெற கொடுக்கப்பட்ட நில பத்திரங்கள் ஏலத்திற்கு வரும் என்பதால், தனது முன்னாள் தொழில் கூட்டாளிகளிடம் கடனில் தனது பங்கை திருப்பி கொடுத்துவிடுவதாகவும், தனது நிலப்பத்திரத்தை வங்கியில் இருந்து பெற்றுத்தருமாறும் பூபதி கேட்டுள்ளார்.

அவர்கள் அதற்கு செவிசாய்க்காத நிலையில், கடன்பெற்ற வங்கிக்கு சென்று தனது பங்கை திருப்பி செலுத்த தயாராக இருப்பதாகவும், தனக்கு சொந்தமான நில பத்திரங்களை விடுவிக்குமாறும் பூபதி கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் சட்டப்படி கடன் தொகை முழுமையாக திருப்பி செலுத்தப்பட்டால் மட்டுமே நில பத்திரங்களை விடுவிக்க முடியும் என்றும், தனியாக ஒருவரது நிலப்பத்திரத்தை மட்டும் விடுவிக்க முடியாது என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் தொடர்ந்து பலமுறை பூபதி வங்கிக்கு சென்று முறையிட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் அந்த வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்ட பூபதி, வங்கியில் இருந்த இருக்கையில் அமர்ந்துள்ளார்.

அவர் சிறுது நேரத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு ஆம்புலன்சில் வந்த மருத்துவர், பூபதி வயல்வெளிகளில் எலிக்கு வைக்கப்படும் மருந்தை சாப்பிட்டு விட்டதாகவும், அவர் முன்பே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த வெரைட்டி ஹால் போலீசார், பூபதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பூபதியின் மகன் குமார் பேசும் போது, வங்கி கடன் பெற தனது தந்தை கொடுத்த நிலபத்திரங்களின் மதிப்பு மற்றவர்கள் கொடுத்த நிலப்பத்திரங்களை விட அதிகம் என்று கூறினார். மேலும், தனது தந்தையுடன் சேர்ந்து கடன் பெற்ற மற்றவர்கள் கடனில் தங்கள் பங்கினை செலுத்த முன்வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வங்கியிலேயே விவசாயி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து வெரைட்டி ஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments