மனிதன் பாதி-மிருகம் பாதி கலந்து செய்யும் புதிய ஆய்வு

0 828

ஸ்டெம் செல் ஆய்விற்காக, மனித-விலங்கு கலப்பின கருவை உருவாக்க ஜப்பான் ஆய்வாளர்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மனிதர்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தேவைப்படும் உறுப்புகளை வளர்த்தெடுக்கும் ஆய்வின் ஒரு பகுதியாக, மனித ஸ்டெம் செல்கள் எலிகளின் கருக்களில் வளர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட உள்ளது.

விண்வெளி ஆய்வு போன்றவற்றிற்கு பயன்படுத்தும் நோக்கில், மனித-சிம்பன்சி கலப்பினத்தை உருவாக்கும் முயற்சிகள் சோவியத் ஒன்றியத்தில் நடைபெற்றதாக தகவல்கள் உள்ளன. சீனாவிலும்கூட இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுவது உண்டு. இருப்பினும் இயற்கையோடு விபரீதமாக விளையாடும் முயற்சி என்ற வகையில், மனித-விலங்கு கலப்பினக் கரு ஆய்வு என்பது சர்ச்சைக்குரிய ஆய்வுகளில் ஒன்றாகவே உள்ளது. இத்தகையை ஆய்வுகளுக்கு தடை, நிதியுதவி தடுக்கப்படுவது என உலகம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.

அதேசமயம், மனிதர்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கு தேவையான உறுப்புகளை தேவைக்கேற்ப விலங்குகளின் கருக்கள் மூலமாக வளர்த்தெடுக்க முடியும் என்றும், இதன் மூலம் மருத்துவத்துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நம்பும் ஆய்வாளர்கள் உள்ளனர். அந்த வகையில், ஜப்பானை சேர்ந்த முன்னணி ஸ்டெம்செல் ஆய்வாளரான ஹிரோமிட்சு நகாச்சி ((Hiromitsu Nakauchi)) இதற்கான அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வந்தார். இந்நிலையில், மனித-விலங்கு கலப்பின கருக்களை உருவாக்கி, அதை விலங்குகளின் கருப்பையில் வைத்து முதிர்வுக்காலம் வரை வளர்த்தெடுப்பதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடையை ஜப்பான் கடந்த மார்ச்சில் நீக்கியது.

அந்த வகையில் ஜப்பான் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகம் வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள நகாச்சி விண்ணப்பத்திற்கு ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஆய்வின் மூலம் உடனடியாக மனித உறுப்புகளை வளர்த்தெடுத்துவிட முடியாது என்றும், ஆனால் அதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவும் படிப்படியாக மேம்பாட்டை எட்டவும் இவை உதவும் என்றும் நகாச்சி கூறியுள்ளார். iPS வகை மனித ஸ்டெம்செல்களை எலிகளின் கருக்களில் செலுத்தி முதல் கட்டமாக கணையம் போன்ற உறுப்பை உருவாக்க முடியுமா என ஆய்வு செய்யப்பட உள்ளது.

டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. எடுத்த எடுப்பிலேயே, மனித-விலங்கு கலப்பின கரு முதிரும் வரை வளர்த்தெடுக்கப்படாது என்றும், உறுப்புகள் உருவாகும் வரை, 14.5 நாட்கள் மற்றும் 15.5 நாட்கள் வரை மட்டுமே வளர்த்தெடுக்கப்படும் என்றும் நகாச்சி கூறியுள்ளார். முன்னெச்சரிக்கையாக, இத்தகைய கட்டுப்பாடுகளுடன் ஆய்வைத் தொடங்குவது வரவேற்கத் தக்கது என்று வரவேற்பு தெரிவித்துள்ள ஜப்பான் அறிஞர்கள் சிலர், பொதுமக்களிடம் விளக்கி, அவர்களின் அச்சத்தைப் போக்குவதையும் இது சாத்தியமாக்கும் என்று கூறியுள்ளனர்.

நகாச்சி ஆதரவாளர்கள் இதை வரவேற்கும் அதேநேரத்தில் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட உறுப்பை வளர்த்தெடுப்பது என்பதைத் தாண்டி, மனித செல்கள் விலங்குகளில் பரவி, மனிதன் பாதி-மிருகம் பாதி என்றவகையில் கலப்புயிரிகளை உருவாக்கி விடலாம் என்றும், இது கடவுளின் படைப்போடு விளையாடும் விளையாட்டு என்றும் விமர்சிக்கப்படுகிறது. இத்தகைய முயற்சிகள் மனிதகுலத்திற்கு உதவுமா, இயற்கையோடு விபரீத விளையாட்டாக முடியுமா என்பது ஆய்வாளர்களின் கையில்தான் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments